Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ சின்னத்துரை வலியுறுத்தல்

தமிழ்நாடு

எம்எல்ஏ சின்னத்துரை

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரித்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்கக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை  சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கி மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 5 ஆயிரம் பத்திரிகையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த வாரியத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேநேரத்தில் இந்த வாரியத்தில் இணைய முடியாமல் அதிகம்பேர் தவித்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாய் எங்களின் தீக்கதிர் நாளிதழில் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர், துணை ஆசிரியர், உதவி ஆசிரியர், பக்க வடிவமைப்பாளர் போன்றோர் இணைய முடியவில்லை. இதேபோல பிற நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் உள்ள ஆசிரியர் குழாமைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் (உழைக்கும் பத்திரிகையாளர் சட்டப்படியான) சேர முடியவில்லை.
மேலும், எனது சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கந்தர்வகோட்டை, கீரனூர் பகுதிகளில் பணியாற்றி வரும் வட்டாரச் செய்தியாளர்களும் இணையமுடியவில்லை. உண்மையில் இவர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கடைநிலை பத்திரிகையாளர்கள். இதேபோலத்தான் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாரச் செய்தியாளர்களும் நல வாரியத்தில் இணைய முடியவில்லை.
எனவே, மேற்கண்ட இந்த தடைகளைக் களைந்து இணைய முடியாமல் உள்ள அனைத்துப் பத்திரிகையாளர் களையும் நலவாரியத்தில் இணைத்திட அரசு உரிய விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு மிகவிரைவில் அவர்களையும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மா. சின்னதுரை
கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top