Close
அக்டோபர் 5, 2024 7:06 மணி

இந்து கோயிலுக்கு சொந்தச்செலவில் கொட்டகை அமைத்துக் கொடுத்த இஸ்லாமியர்…!

புதுக்கோட்டை

ஓலைக்குடிப்பட்டியில் உள்ள முருகன் கோயிலுக்கு சொந்தச்செலவில் அமைத்துக்கொடுத்த பக்தர்களுக்கு நிழல் தரும் கொட்டகையை திறந்து வைத்த திருமயம் ஊராட்சித்தலைவர் எம். சிக்கந்தர்

திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள செல்வகணபதி, பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்த செலவில் பக்தர்கள் நிழலில் நின்று சுவாமி கும்பிடும்  வகையில் கொட்டகை  அமைத்துக் கொடுத்த  முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின்  மதநல்லிணக்க நடவடிக்கை  பக்தர்களையும் பொது மக்களையும்  நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஓலைகுடிபட்டி யில் உள்ள செல்வகணபதி மற்றும் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு விழாக் காலங்களில் செல்லும் பக்தர்கள் வெயில் மற்றும் மழையில் நின்று சிரமப்படாமல்   தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயிலின் முன் பகுதியில் கொட்டகை அமைத்துத்தர வேண்டும் என திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தனது சொந்த நிதி ரூ 2.10 லட்சம் செலவில் அந்தக்கோயிலுக்கு  முன்புறம் பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய வசதியாக  மேற்கூரையுடன் கொட்டகை அமைத்து,  அதை திங்கள்கிழமை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு  திறந்து வைத்தார். இதில் கிராம பொதுமக்கள், ஊராட்சித் தலைவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்துக்கோயிலுக்கு முஸ்லீம் மதத்தைச் சார்ந்த  ஊராட்சி மன்ற தலைவர் உள்ளாட்சி நிதியைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருந்தும் அதைத் தவிர்த்து விட்டு,  சொந்தச் செலவில் (மெட்டல் ஷீட்) நிழல் கொட்டகை அமைத்துக் கொடுத்த நிகழ்வு  மத நல்லிணக் கத்துக்கு  எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதாக அந்த கிராம மக்கள், பக்தர்கள், மத நல்லிணக்க ஆர்வலர்கள்  பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top