Close
நவம்பர் 22, 2024 1:35 காலை

உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு: காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ. 1,800 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னை

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஜெ.பி.ஐரீன் சிந்தியா ஆகியோர் முன்னிலையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வு

உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு மும்பையில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள நிலையில் இதன் ஒரு பகுதியாக ரூ. 1,800 கோடி மதிப்புள்ள தொழில் வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காமராஜர் துறைமுகம்  மேற்கொண்டுள்ளது.

இது குறித்து காமராஜர் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் மூன்றாவது உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு வரும் அக்.17 செவ்வாய்க்கிழமை மும்பையில் தொடங்க உள்ளது.

தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்தியாவின் அனைத்து பெருந்துறைமுகங்கள், உள்நாட்டு நீர்வழித்தடங்கள் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதற்காக ரூ.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலீடுகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரட்டுவதற்கு இம்மாநாட்டில் வழிவகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஜெ.பி. ஐரீன் சிந்தியா ஆகியோர் முன்னிலையில் காமராஜர் துறைமுகம் சார்பில் சுமார் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்க ளுக்கான 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டன.

இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்,  எண்ணூர் டேங்க் டெர்மினல்,  துறைமுகம், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக் கான தேசிய தொழில்நுட்ப மையம்,  தமிழ்நாடு நீர்வளத் துறை,  தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், இந்திய துறைமுக ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன்,

தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பு,  தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் சார்பில் முக்கிய அதிகாரிகள் வெள்ளிக் கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இவை தவிர மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம்,  இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காமராஜர் துறைமுகம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1, 920 கோடி காமராஜர் துறைமுகம் சார்பில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

காமராஜர் துறைமுகம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாரதப் பிரதமரின் “ஆத்மநிர்பர் பாரத் அபியான்” திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும்.

 மாநாட்டின் முதல் நாளான அக்.17 -அன்று தமிழ்நாடு அரசுடன் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் முதலீடுகளுக்கான சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

 இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் https://maritimeindiasummit.com/conference-registration/ என்ற இணையத் தள முகவரியில் பதிவு செய்யலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top