வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து இப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை கடலோர காவல் படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மத்திய வங்க கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனயடுத்து இப்பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
மேலும் காற்றும் பலமாக வீசி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் நிலையில் இது புயலாக மாறும் அபாயமும் உள்ளது. எனவே ஏற்கெனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரைக்கு திரும்புமாறும், அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரித்துள்ளது.
கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ராணி அபாக்கா மூலம் வெள்ளிக்கிழமை வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் ஒலிபெருக்கி மூலம் புயல் குறித்து விளக்கமாக எச்சரிக்கை செய்து உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டனர் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.