பெங்களூரில் டிச. 1 முதல் 10 –ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 2 ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இது குறித்து பெங்களூரில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் மதிப்புறு தலைவர் பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
2022 -ஆம் ஆண்டு பெங்களூரில் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகை யாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முதலாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றதற்கு தமிழ் ஊடகங்கள்தான் முக்கிய காரணம்.
அந்த ஊடகத்துறையின் துணையோடு 2ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா டிச.1 முதல் 10 -ஆம் தேதி வரை பெங்களூரில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடுயூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நடத்தப்படவிருக்கிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 27 அரங்குகள் அமைக்கப்பட வுள்ளன.
தமிழ்ப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் இந்த விழாவில் முதல்முறையாக கன்னட நூல்களும் இடம் பெறும்.டிச.1 -ஆம் தேதி மாலை 3 மணிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர்.வி.ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பங்கேற்று தமிழ்ப் புத்தகத் திருவிழாவை தொடக்கி வைக்கவுள்ளார்.
சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத், பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி. பி.சி.மோகன், தி இன்ஸ்டிடுயூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் தலைவர் லட்சுமண், செயலாளர் என்.டி. ரங்காரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
டிச.3 -ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்பு மலரை, சுற்றுலாத்துறை இயக்குநரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர் வெளியிடுகிறார்.
புத்தகத்திருவிழாவில் தினம்தோறும் இலக்கிய மாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், பி.வீரமுத்துவேல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இலக்கியவாதிகள் அப்துல்காதர், கவிஞர் அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, பார்த்திபராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
டிச.10 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ.விஸ்வநாதன் கலந்து கொண்டு, கர்நாடகத்தில் தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் 15 பேருக்கு கர்நாடகத் தமிழ் ஆளுமை விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
அந்தவிழாவில், தமிழறிஞர் குணாவுக்கு கர்நாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்படும். புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் சிறந்த நூல்களுக்கான போட்டியில் வெற்றிபெறும் நூல்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப் படுகிறது.
பொதுமக்கள், மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.
விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.தமிழ் மரபு விளையாட்டு கள், தமிழ் மரபு தின்பண்டங்கள் திருவிழாவில் இடம் பெறும். தமிழ்ப் புத்தகத் திருவிழாவிற்கு பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற் கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளில் இருந்தும் பலரும் வருகை தரவுள்ளனர் என்றார். பேட்டியின் போது சிறப்புமலர்க்குழு பொறுப்பாளர் புலவர் கி.சு.இளங்கோவன், தமிழ் மொழித்திறன் போட்டிக்குழு பொறுப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி, தமிழ் மரபு விளையாட்டுக்குழு பொறுப்பாளர் இம்மாக்குலெட் அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.