Close
ஜூலை 7, 2024 10:51 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காபி வித் கலெக்டர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்வில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில்,  ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (16.11.2023) கலந்துரையாடினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனிற்காக எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தினை மேம்படுத்தி வருகிறார்.

மேலும் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் அனைவரும் பாடப் புத்தகங்களை பயில்வது மட்டுமின்றி, சிறந்த அறிஞர்களின் புத்தகங்கள், பொதுஅறிவு புத்தகங்கள் உள்ளிட்ட அறிவை பெருக்கிக் கொள்ளும் சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

இவ்வாறு படிப்பதன் மூலம் நீங்கள் இலக்காக வைத்திருக்கும் உயர்ந்த இடத்தினை அடைய முடியும். எனவே மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி உயர் நிலையினை அடைவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top