Close
ஜூலை 7, 2024 9:44 காலை

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை..?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலையம்

அரசு போக்குவரத்துக்கழக தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடங்கிய வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் சங்கத்தினர் கூறினர்.

கடந்த 1996 -ல் புதுக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு அரசு போக்குவரத்துக்கழக மண்டலம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் நகர், புறநகர் பிரிவுகள் மூலம் 417 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மண்டலத்தில் திருச்சி, மணமேல்குடி, புதுக்கோட்டை நகர், புறநகர், இலுப்பூர், கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி என 9 பணிமனைகளுடன் கிளைகள் இயங்கி வருகின்றன. இம்மண்டலத்தில், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் உள்பட சுமார் 2700 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

புதுக்கோட்டை
பேருந்துநிலையத்தில் திமுக தொமுச தொழில்சங்க நிர்வாகிகளுடன் நகரச்செயலர் ஆ.செந்தில்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் எனவும் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

அதேபோல, காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒப்பந்த அடிப்படையில் 812 பேரை போக்குவரத்து ஊழியர்களாக பணி நியமனம் செய்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு போக்குவரத்து கழகத்தின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளன.

அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி..

ஜன.9- ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம் பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஜன 8 -ல் நடைபெற்றது.

புதுக்கோட்டை
திருச்சி பேருந்துக்காக புதுகை பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலை யில், சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன், அண்ணா தொழிற் சங்க பேரவைத் செயலாளர் கமலக் கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்தது. இந்த பேச்சு வார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதைதொடர்ந்து சென்னை மாநகரின் பல்வேறு பணிமனை களில் தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தி விட்டு நேற்று மாலையே போராட்டத்தை தொடங்கினர். பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் தொடர்பான நிலவரத்தைப் பார்க்காலம்.. புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள 387 பேருந்துகளில் 365 பேருந்துகள் இயக்கப்படுவதாக மண்டல பொது மேலாளர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் காலையில் இயங்கிய பேருந்துகளில் கல்லூரிக்கு வந்த மாணவிகள்

சிஐடியு தொழில்சங்க மாவட்ட பொதுச்செயலர் மணிமாறன், முன்னாள் பொதுச்செயலர்   க. முகமதலி ஜின்னா  ஆகியோர் கூறியதாவது: மாவட்டத்தில் சுமார் 70 சதவீதப்பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.இதுதான் உண்மை நிலை. ஆனால், தமிழகம் முழுவதும்  90 , 94, 98 மற்றும் 105 சதவீதம் அளவில் பேருந்துகள் இயங்கி வருவதாக அரசு கூறுவது நகைப்புக்குரியது.

ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் மூன்றாண்டு களை நெருங்கிய சூழ்நிலையிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நாங்கள் ஏமாற்றப் பட்டுள்ளோம்.

அரசு நினைத்தால் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி ஒரு சில மணி நேரங்களில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை  முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியும். வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top