Close
நவம்பர் 23, 2024 9:30 காலை

மனிதருக்கு தேவையான நேரத்தில் தேவையானதை செய்வதும் மனித நேயத்தின் உச்சம்…

உலகம்

ஜீ தமிழர் சூப்பர் சிங்கர்

ஜீ -தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப என்கிற பாட்டு போட்டியில் பங்கேற்று பாடிக்கொண்டிருக்கும் நான்கு நலிவடைந்த போட்டியாளர்களான
வீரபாண்டி (ஆட்டோ கடன் நிலுவை), குணாளன் (மனைவியின் மகப்பேறு செலவு), பாலமுருகன் (கூரை வீட்டை பராமரிக்கும் செலவு) மற்றும் மலையக தமிழன் இந்திரஜித் (சென்னையில் தங்குமிட உணவுக்கான செலவு) ஆகியோருக்கு, பிரபல வழக்குரைஞர் சுமதி அவர்கள் மனப்பூர்வமாக முன்வந்து உதவி செய்தார்.

திறமையிருந்தும் பொருளாதார ரீதியில்பின் தங்கிய அவர்களுடைய அவசிய தேவை மற்றும் அதன் செலவினங்களுக்கு தான் பொறுப் பேற்பதாக மேடையில் தோன்றி அறிவித்ததை நேற்றிரவு பார்த்தேன். உடனே அவரிடம் பேசி அவரது ஈகைக்குணத்தை பாராட்டி ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என தோன்றியது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான எனது நண்பர்கள் பாலா மற்றும் அமுதன் இருவரையும் தொடர்புக்கொண்டு, சுமதி அவர்களின் அலைபேசி எண்ணை வாங்கி இன்று காலை அவருடன் சிறிது நேரம் உரையாடினேன். நெகிழ்வான தருணம்.

‘புத்தகங்களையும் சாமியையும் தான் நான் நம்புகிறேன்’ என்று மென் புன்னகையுடன் பேசுகிற பிரபல வழக்குரைஞர் சுமதி அவர்கள் நமக்கு நன்கு பரிச்சயமான பேச்சாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்என பன்முக ஆளுமையாக அறியப்படுபவர். பட்டிமன்ற மேடைகளில் தனது வாதங்களை சமூக அக்கறையுடன் கவனமாக முன் வைப்பவர்.

” Help is doing a right thing to a right person at the right time ” என்பார்கள். ஆம் சரியான மனிதருக்கு சரியான நேரத்தில் செய்யும் சரியான செயலும், தேவையான மனிதருக்கு தேவையான நேரத்தில் தேவையானதை செய்வதும் மனித நேயத்தின் உச்சம்.
உதவி என்பது, “இயலாமை நிலையில் இருந்து மீட்பது“ என்பது தான் வரைவிலக்கணம். இது வாழ்வில் பல வழிகளிலும் வரலாம். உடலால் ஒருவர் நொந்து போலாம். உள்ளத்தால் இன்னொருவர் காயப்படலாம். பொருளின்றி பிறிதொருவர் நலியலாம்.
தேவை எதுவாக இருப்பினும், தக்க தருணத்தில் அதை எந்த வழியிலாவது பூர்த்தி செய்ய நாம் வழங்கும் பங்களிப்பே உதவி. அந்த வகையில் அந்த நான்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து (போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ இல்லையோ அது வேறு) தக்க தருணத்தில் சுமதி அவர்கள் செய்த உதவி, அதன் பெறுமதி, விலை மதிப்பிட முடியாத ஒன்று.

உதவி செய்வதை இரண்டு வகையாக கணக்கில் கொள்ளலாம்.ஒன்று, முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக ஏதேனும் ஒரு இடத்தில் ஏதோ ஒரு உதவியை செய்து விட்டு கடந்து விடுவது. இன்னொன்று நட்பு மற்றும் உறவினர் வட்டத்தில் செய்வது. நீங்களோ நானோ இந்த இரண்டு வகையிலும், ஏதோ இயன்றதை செய்து கொண்டிருக்கலாம்.

வழக்கறிஞர் சுமதி போன்ற ஆளுமைகள் இப்படி பொதுவெளியில் தோன்றி, தான் செய்து வருகிற நற்பணிகளை வெளிக்கொணர்வது,
இன்னும் பலரை ஊக்குவிப்பதாக இருக்கும். அந்த எண்ணத்தில் தான் தனியார் தொலைக்காட்சியின் தளத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார். நீங்களும் வாருங்கள் என்று கை நீட்டி அழைப்பது போல் இருந்தது அவரது சுருக்கமான உரை.

உங்கள் மனித நேயத்தை போற்றுகிறோம். யாரும் அடையாளமற்று போகி விட கூடாது என்கிற உங்களது அக்கறை வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் அம்மா.

#இங்கிலாந்திலிருந்து சங்கர்# 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top