புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்களை அதிவேகமாக நடவு செய்து வரும் வனத்தோட்டக்கழகத்தினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமென இந்திய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவரும், தீவிர விவசாயியுமான ஜி.எஸ். தனபதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுந்தரவள்ளிக்கு அவர் அனுப்பிய மனு விவரம்:
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமார் 55,000 ஏக்கர் காப்புக்காடுகள் உள்ளது இதில் 50,000 ஏக்கரில் வனத்தோட்டக் கழகம், அன்னிய ஒரின மரமான தைலமரத்தோட்டங்கள் அமைத்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6003 பாசனக்குளங்களுக்கு செல்லும் தண்ணீரை முற்றிலும் வராமல் பல்வேறு வகைகளில் தடுப்புகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாய் கடந்த 10 ஆண்டுகளாக, CRPC 133, மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 5 ஆண்டுகள் தடையாணை பெற்றிருப்பதுடன், தற்போது அந்த வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் 6 நபர் கொண்ட விசாரணை ஆணையம் அமைத்ததுடன், இரண்டு மாதத்தில் விசாரணை அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தினர், புதிதாக தைல மரத்தோட்டங்கள் அமைக்க அதி வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
தற்போதே மழை பெய்தும் குளங்கள் நிறையாததால் விவசாயம் தொடங்க முடியவில்லை. மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்தில் சென்று விட்டதால் மக்கள் தண்ணீரின்றி தவிக்கிறார்கள். மேலும் தைலமரக்காட்டில் குரங்கு, மயில் மலைப்பாம்பு, மான், போன்றவற்றிற்கான உணவு கிடைக்காத காரணத்தால், புதுக்கோட்டை நகர் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளில் புகுந்து பொது மக்களுக்கு மிகுந்த இடையூரை ஏற்படுத்தி வருகின்றன.
நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை புதிதாக தைல மரங்களை நடவு செய்வதை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே காப்புக்காடுகளில் உள்ள தைல மரங்களையும் முற்றிலும் அகற்றி அந்த இடங்களில் பலன் தரும் பல்லுயிர் வாழக்கூடிய பசுமைக்காடுகளை உருவாக்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.