Close
நவம்பர் 21, 2024 12:46 மணி

இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

பஞ்சபூதங்களை தியானித்தால் நன்மைகள் ஏற்படும் என்று சொல்வது உண்மையா? கண்ணுக்குத் தெரியாத காற்றை எப்படி தியானிப்பது?

எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு விளைவு அதாவது பலன் உண்டு. எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்பதுவே சொல்லப்பட்ட உண்மை. உலகில் உள்ள எந்த ஒரு மதத்தின் வழிபாடுகளோ, ஜெபதபங்களோ யாவும் மனதால் தான் செய்யப்படுகின்றன.

மனம் எதை நினைக்கிறதோ, அதை, அந்த நிலையை அடைகிறது. எனவே பஞ்சபூதங்களை ஒரு மனதோடு தியானிக்கும் பொழுது அவைகளின் தன்மையும், ஆற்றலும் நமக்கு கிடைக்கிறது. ஆழ்ந்த தியானத்தின் மூலமாகப் பஞ்சபூதங்களைத் தன்வசப்படுத்த முடியும் என்று யோக சாஸ்திரமும் சொல்லியிருக்கிறது.

அதாவது அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில். அண்டத்தில் உள்ளபஞ்சபூத சக்திகளைப் பிண்டத்தில் உள்ள பஞ்சபூத ஆற்றல்களோடு இணைத்து தியானித்தால் பஞ்சபூத வசிய சக்தியைப் பெறலாம் என்பது கோட்பாடு.

அண்டங்களெல்லாம் பஞ்ச பூதங்களாலாகியதே. பிண்டமும் அவ்வாறே.

அண்டமாகிய வெளிக்கும், நம் சரீரத்திற்கும் சூக்கும சரீரத்தின் மூலமாகத் தொடர்பு உள்ளது. இவ்வுலகெங்கிலும் பல படித்தரங்களில் இயங்கி வரும் பஞ்சபூத சக்திகள் நம் சூக்கும சரீரத்தில் அமைந்துள்ள ஏழு ஆதாரங்கள் மற்றும் நாடிகள் மூலமாக நம் உடலில் உள்ள பஞ்சபூத சக்திகளைத் தூண்டுல் அடையும்படிக்குச் செய்கின்றன.

எனவே நம் சரீரத்தில் உள்ள ஆகாயத்தில் வெளி ஆகாயத்தையும், பிராண வாயுவில் வெளி வாயுவையும், ஜடராக்கினியில் வெளி அக்னியையும், அப்புவின் அம்சத்தில் வெளியில் உள்ள நீரையும், பிருதிவி எனப்படும் மண் அம்சத்தோடு பூமியையும் இணைத்து தியானம் செய்து வர வேண்டும். இதற்கு முறையே அ,ய,ர,வ,ல எனும் மந்திர அட்சரங்கள் தரப்பட்டுள்ளன.

சுவாசத்தை பிருதிவி ஸ்தானத்தில் வைத்து நிறுத்தி, ” *லம்* ” என்ற பீஜ அட்சரத்தை உச்சரித்தபடி தினமும் காலை, மாலை இரண்டு மணி நேரம் ஒரு மனதோடு தியானம் செய்ய வேண்டும். இதில் வெற்றி பெற்றவர்களை பூமிக்குள்ளே புதைத்து வைத்தாலும், அவர்கள் எந்த வித சேதாரமுமின்றி உயிரோடு வெளியே வருவார்கள். இது நம் உடலிலுள்ள பிருதிவி அம்சத்தை பூமியோடு இணைக்கும் தியானமாகும். இதில் அனுபூதியடைந்தவர்களை மண் பூதம் பாதிப்பதில்லை.

இரண்டாவதாக சுவாசத்தை நீர் ஸ்தானத்தில் நிலை பெறச் செய்து ” வம்” என்ற பீஜ அட்சரத்தை உச்சரித்து அனுபூதி பெற்று விட்டால், அவர்களை நீர் பூதமானது எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. நீரில் நடப்பது, மிதப்பது போன்ற ஆற்றல்களைப் பெறுவதோடு, கடலுக்குளே கூட சஞ்சரிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவதாக அக்கனி ஸ்தானத்தில் சுவாசத்தை நிறுத்தி ” ரம்” என்ற பீஜ அட்சரத்தை இடைவிடாது தியானித்து சரீரத்திலுள்ள அக்னியோடு வெளி அக்னியை இணைத்து விட்டவர்களை நெருப்பு பொசுக்குவதில்லை. அதாவது அக்னி தேகத்தைத் தீண்டாது. அடுத்தபடியாக வாயு ஸ்தானத்தில் சுவாசத்தை நிறுத்தி ” யம் ” என்ற பீஜ அட்சரத்தை இடைவிடாது உச்சரித்து தியானிக்க வேண்டும். இதில் அனுபூதியடைந்தவர்களுக்கு வாயு சித்தி ஏற்படும். வாயுவால் பாதிப்பு ஏற்படாது.

இறுதி நிலையாக ஆகாய ஸ்தானத்தில் ” அம் ” என்ற பீஜ அட்சர தியானம் வருகிறது. இதில் அனுபூதியடைந்தவர்கள் மரணத்தை வென்றவர்களாவார்கள். ககன மார்க்கத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

காற்று(வாயு) பூதத்தைப் பொருத்த வரை காண முடியவில்லை என்றாலும் நாம் உணரத்தானே செய்கிறோம். எனவே நம் தொடு உணர்வு மூலமாகவோ அல்லது மூச்சுக் காற்றை எண்ணியோ தியானிக்கலாம்.

மேலை நாடுகளில் காற்றுக்கு மரத்தையும், ஆகாயத்திற்கு உலோகத்தையும் எண்ணி தியானிக்கும் பழக்கம் பன்னெடுங்காலமாகவே இருந்திருக்கிறது. இத்தகைய வல்லமைகளைப் பெற்ற ஞானிகளே பழங்காலங்களில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காத்தருளியிருக்கிறார்கள்.

இந்தத் தியானங்கள் மூலம் அவர்கள் பஞ்சபூதங்களை வசியப்படுத்தி விடுவதால், பஞ்சபூதங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டன. இன்றைய கால கட்டங்களில் இத்தகைய ஆற்றல் பெற்றவர்களைக் காண்பது அரிது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top