“ஓல்ட் இஸ் கோல்ட்” ஒரு தரமான சம்பவம்
அந்த மூத்த தம்பதி ஒரு தனியான வீட்டில் வசித்து வந்தனர். பெரிய வீடு. ராஜாராம் என்பது அவரது பெயர். வயசு 87தான் ஆகிறது. வங்கித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி சுலோச்சனா. அவருக்கு வயசு 83. கணவன் மனைவி இருவரைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. அன்று இரவு நேரத்தில் வயதான மனைவி சுலோச்சனா படுக்கையில் படுத்துக்கொண்டு இருந்தவாறே தனது வயதான கணவரைப்பார்த்து,
“ஏங்க..இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். கார் ஷெட்டின் வாசல் லைட்டை அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க”. என்றார்.
ராஜாராம் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஐந்தாறு திருடர்கள் தனது கார் நிறுத்தியுள்ள ஷெட்டின் ஷட்டர் கதவை உடைக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
ராஜாராம் உடனே மெதுவாக நகர்ந்து அடுத்த அறைக்குச் சென்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தை போனில் அழைத்தார்.
“ஹலோ…கொஞ்சம் எனது அட்ரஸை எழுதிக்கோங்க. வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கறோம். எங்கள் வீட்டில் இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் கார் நிறுத்தியுள்ள ஷெட்டின் ஷட்டர் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு போலீஸ் டீமை சீக்கிரம் அனுப்புங்கள்.” என்றார் கொஞ்சம் மெதுவான குரலில், ஆனால் பதற்றத்துடன்.
மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு காவல் அதிகாரியின் குரல் வந்தது, “உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது போலீசார் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமை ஏற்பாடு செய்தபின்னர், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்.” என்றார் அசால்ட்டாக.
இதைக் கேட்ட பெரியவர் ராஜாராம் திடுக்கிட்டதுடன் ஏமாற்றமும் அடைந்தார். ஆனால் மறுபுறம் கார் ஷட்டர் கதவை உடைப்பதில் திருடர்கள் தீவிரமாக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அவருக்கு மனதுக்குள் ஒரு யோசனைத் தோன்றியது. இரண்டு நிமிடங்கள் கழித்து ராஜாராம் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தார். அதே அதிகாரி போனை எடுத்தார்.
“ஐயா வணக்கம். இப்போது நீங்கள் யாரையும் எங்கள் வீட்டுக்கு திருடர்களைப் பிடிக்க அனுப்ப வேண்டியதில்லை. ஏன்னா..அந்த ஐந்து திருடர்களையும் துப்பாக்கியால் சுட்டு விட்டேன்” என்று நிதானமாகக் கூறிவிட்டு போனை ‘டொக்’ என்று வைத்தார்.
அடுத்த நொடி போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்தே நிமிடங்களில், ஒரு போலீஸ் டீம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு துணை டாக்டர், மூன்று டாக்டர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன் ராஜாராம் வீட்டை அடைந்தது.
போலீசார் வந்ததும் மிரண்ட திருடர்கள் போலீஸ் டீமிடம் சிக்கிக்கொண்டது. ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் ராஜாராமை அணுகி, “நீங்க அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சொன்னீர்கள். ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்திருக்கிறோமே?’ என்று கேட்டார்.
“நீங்கக் கூடத்தான் நான் போன் பண்ணும்போது போலீஸ் டீம் எதுவுமே இப்போ இல்லை என்றீர்கள். நான் கேட்டேனா..?”. என்றார் ராஜாராம் கூலாக.
மௌனமாக நகர்ந்தார் போலீஸ் அதிகாரி.
மூத்த குடிமக்களின் அறிவாற்றலை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஓல்ட் இஸ் கோல்ட்.