மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் அடையாளம் தெரியாத தொலைபேசியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெர்மினல் 1 இல் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில், முகமது என்ற நபர் மும்பையிலிருந்து அஜர்பைஜானுக்கு வெடிபொருட்களுடன் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
மதியம் 3 மணியளவில் வந்த அழைப்பு தகவல் தெரிவித்துவிட்டு திடீரென துண்டிக்கப்பட்டது. ஆனால் எந்த விமானம் என்ற தகவலை வழங்காமலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
சிஐஎஸ்எஃப் உடனடியாக சஹார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நாக்பூரில் இருந்து கொல்கத்தா செல்லும் மற்றொரு விமானம் ராய்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தற்போது விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.