பிரதம மந்திரியின் ‘பிஎம் கிஷன் யோஜனா’ என்ற போலியான மோசடி ஆப் பயன்படுத்தி, யுபிஐ. மூலம் பண மோசடி நடப்பதாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிகை தெரிவித்துள்ளனர்.
தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
‘போன் பே’ உள்ளிட்ட, யு.பி.ஐ., பயன்பாடு வாயிலாக, மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிகஅளவில் நடந்து வருகின்றன. ‘போன் பே’ போன்ற யுபிஐ மூலமாக வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏழு புகார்கள் பெறப்பட்டுள்ளன.
புகார் கொடுத்தவர்களின் பேங்க் கணக்கில் இருந்து, ‘அமேசான் பே’ செயலிக்கு பணம் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அனுமதியில்லாத பணப்பரிவர்த்தனை குறித்த நீண்ட விசாரணையில், ‘பிஎம் கிஷன் யோஜனா’ என்ற போலியான ஆப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆப் பல்வேறு சேனல்கள் வழியே , வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்பட்டு வருகிறது. இது, பயனாளிகளின் எஸ்.எம்.எஸ் பயன்பாட்டையும், சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.
மோசடிக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் வருவதை தடுத்து அதன் வழியாக யு.பி.ஐ., ஆப்களுக்கு மாற்றம் செய்து பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மோசடியாக சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு யு.பி.ஐ.ஆப்களில் பயன்படுத்தி, அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மோசடியான முறையை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆப், பெயர், ஆதார் எண், பான் மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகளை, இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறது. இந்த அதிநவீன மோசடி பலருக்கு நிதி மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மோசடிக்காரர்கள் அரசின் நலத்திட்டங்களின் மீதான நம்பிக்கையை போக்கி இருப்பதுடன் அரசு திட்டங்களை பெறுவதில் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
எனவே, பொது மக்கள் தங்களது வங்கி கணக்கை அவ்வப்போது கண்காணிப்பதுடன், அனுமதியற்ற பண பரிமாற்றங்கள் நடந்திருந்தால் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்.மேலும், தெரியாத இணைப்புகளை(Link), ‘கிளிக்’ செய்வதாய் தவிர்க்கவேண்டும்.
தேவையில்லாத மின்னஞ்சல் செய்திகளுக்கு பதிலளிப்பதையும் தவிர்ப்பது நல்லது. எந்த சூழலிலும், யு.பி.ஐ., தரவுகளை அல்லது ஓடிபி., எண் பகிர்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது மொபைல் போனில் உறுதிப்படுத்தப்படாத ஆப்களை பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறான மோசடி குறித்து புகார் அளிக்க, 1930ஐ அழைக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.