இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டங்கலாக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி லபுசேன் அரைசதம் எடுத்தார். ஹெட் சதம் அடித்தார். இவர்களின் அபார ஆட்டத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி 157 ரன் பின்தங்கியது. இந்த நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியில் ‘டாப்-ஆர்டர்’ பேட்டர்கள் சொதப்பி ஏமாற்றினார்கள்.
ராகுல் (7), ஜெய்ஸ்வால் (24), சுப்மன் கில் (28), கோலி (11), கேப்டன் ரோகித் (5) என டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒருவரும் கைகொடுக்கவில்லை. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்திருந்தது. ரிஷப் பன்ட் (28), நிதிஷ் குமார் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
சமநிலையில் அணிகள்
இன்று (8ம் தேதி) 3வது நாள் ஆட்டம் துவங்கியது. 6வது பந்தில் ரிஷப் பன்ட் (28) கேட்சானார். அடுத்து, அஷ்வின் (7), ஹர்ஷித் ராணா (0), நிதிஷ் குமார் (42), முகமது சிராஜ் (7) என அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்னில் ஆல்அவுட்டானது.
வெறும் 18 ரன்களே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. 19 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மெக்ஸ்வீனி, கவாஜா துவக்கம் தந்தனர். இருவருமே அணியின் வெற்றியை வசமாக்கினர்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் 14ம் தேதி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடக்கவுள்ளது.