Close
டிசம்பர் 12, 2024 11:35 காலை

விசிக.,விலிருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில், விசிக துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் ஆர்ஜூனாவும் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது திமுகவிற்கு எதிராக அவர் பேசியது அவரது கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கடும் எதிர்ப்புகளும் உருவானது.

இதனையடுத்து கட்சியின் உயர்நிலைக் குழுவில் கலந்தாலோசித்த பிறகு தான்  ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து நீக்க முடியுமா? இல்லையா? என்பது குறித்து கூறமுடியும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதக்காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலைை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top