சைபர்கிரைம் மோசடியில் தினம், தினம் புதுப்புது மோசடிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளது. இன்று மார்க்கெட்டில் உள்ள புதிய மோசடி என்னவென்று பார்க்கலாம்.
“Jumped Deposit” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாதெனில் தவறாமல் கடைசி வரை வாசித்து விடுங்கள். இது ஒரு சைபர் க்ரைம். லேட்டஸ்ட் ரிலீஸ். தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினர் இது குறித்து எச்சரித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.
Jumped Deposit என்றால் என்ன?
இது UPI வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு சைபர் க்ரைம்.
உங்களுக்குத் தெரியாத எண் அல்லது UPI ஐடியிலிருந்து பணம் மாற்றப்பட்டதாக உங்களுக்குத் திடீரென்று ஒரு SMS வரும். முதலில் உங்கள் கணக்கில் ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்படும். நிஜமாகவே.
இது மிகவும் பழைய மோசடி என்பது உங்களுக்குத் தெரியும், இப்போது உங்களுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரும். தவறான UPI க்கு பணம் மாற்றப்பட்டதாக உங்களிடம் கூறப்படும்.
பணத்தைத் திரும்பப் பெற ஒரு இணைப்பு அனுப்பப்படும். அவ்வாறு வரவு வைக்கப்பட்டதற்காக ஒரு எஸ்.எம்.எஸ் வரும். நாமும் ஆர்வமாக “எங்கிருந்து பணம் வந்திருக்கிறது” என்று தெரிந்து கொள்ள முனைவோம்.
இதற்கிடையில், உங்களுக்குப் பணம் அனுப்பியவர் ஒரு withdrawal requestம் அனுப்பியிருப்பார். அவசரமாக நீங்கள் UPI செயலியைத் திறந்து PIN எண்டர் செய்து விட்டால் மேட்டர் ஓவர். அவர் அனுப்பிய withdrawal request அக்செப்ட் ஆகிவிடும்.
இதன் மூலம் ஒரு பெரிய தொகை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து காணாமல் போய் விடும். என்ன நடக்கிறதென்று புரிவதற்குள் எல்லாமும் முடிந்து விடும். கொத்துக் கொத்தாக இந்த புதுவகை மோசடியில் மக்கள் ஏமாந்து வருகின்றனர்.
எவ்வாறு தப்பிப்பது?
பணம் வந்திருக்கிறதென்று எஸ்.எம்.எஸ் வந்தால் உடனே UPI செயலியைத் திறக்கக் கூடாது. குறைந்த பட்சம் முப்பது நிமிடங்களாவது பொறுமை காக்கவும்.
இவ்வாறு செய்வதால் என்னாகும்?
எந்தவொரு withdrawal requestக்கும் “வேலிடிட்டி டைம்” என்று ஒன்றுள்ளது. நீங்கள் அரை மணி நேரம் காத்திருப்பதால் அவர்கள் அனுப்பியுள்ள ரெக்வெக்ஸ்ட் காலாவதியாகி விடும்.
எளிய உபாயம் தான். ஆனால் பணம் வந்திருக்கிறதென்று தெரிந்த பின்னர், “யார், என்ன, ஏன்” என்று தெரியாமல் காத்திருப்பது கடினம். பலராலும் முடியாது.
சாதாரண ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நோட்டிஃபிக்கேஷன்கள் வந்தாலே உடனடியாக பார்க்காமல் இருப்பது என்பது நமக்கு சிரமம். பணம் வந்திருக்கிறதென்றால்?? வாய்ப்பில்லை ராஜா!
இந்த உளவியல் தந்திரம் தான் Jumped Deposit க்ரைமின் தூண்டில். எனவே சிக்காமலிருங்கள்.
“ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்துருக்கணும்” சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இவ்வசனம் வரும்.
ஏமாற்றுபவர்களின் ஆயுதம் பொய் மட்டுமல்ல. அதில் கலந்திருக்கும் சிறுதுளி உண்மையும். Jumped Depositக்கும் இது பொருந்தும்.