பிரேசில் நாட்டில் ஆந்திரத்தின் நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
பிரேசில் நாட்டில் மினாஸ் கிரேஸ் நகரில் உயர் ரக பசுமாடுகள் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த ஏலத்தில் ஆந்திர இனத்தைச் சேர்ந்த பசு ஒன்றை இந்திய மதிப்புப்படி ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்டது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
வியாடினா 19 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பசுவானது, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை பூர்விகமானக் கொண்ட நெலார் இனத்தைச் சேர்ந்தது. நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடுகள் உருவத்தில் மிகப் பெரிய தோற்றம் கொண்டதாக இருக்கும். சுமார் 1,000 கிலோவுக்கு மேல் எடையுடன் அடர்த்தியான தோல் கொண்டு காணப்படும்.
இந்த வகை மாடுகள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடிய சக்தி கொண்டது. அடர்த்தியான தோலின் காரணமாக பூச்சிக் கடிகளால் பாதிக்கப்படாது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடையது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வியாடினா 19 பசு மாடு அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டில் 4.3 மில்லியன் டாலருக்கும் 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டாலருக்கும் வாங்கப்பட்ட இந்த மாடு, இந்தாண்டு சற்று கூடுதலாக 4.82 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
மேலும், சர்வதேச கால்நடைகளுக்காக நடத்தப்பட்ட அழகி போட்டியில் கலந்துகொண்ட வியாடினா 19, மிஸ் தென் அமெரிக்கா விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.