நினைவாற்றலையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான் என்றார் சட்ட அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற புத்தக திருவிழாவை வெள்ளிக்கிழமை(29.7.2022) தொடங்கி வைத்து சட்ட அமைச்சர் ரகுபதி மேலும் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அகிலன், குழந்தை எழுத்தாளர் அழ வள்ளியப்பா ஆகியோரது நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா நடப்பது மிகவும் பொருத்தமானது. புத்தங்கலை வாசிப்பதை தினசரி வழக்கமாக்கிக் கொண்டவர் தலைவர் கலைஞர் கருணாநிதி மட்டும் தான். அவரைப் போல் புத்தக வாசிப்பை நேசித்தவர் எவரும் இல்லை. சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் உதவுவது புத்தகங்கள் தான் என்பதை நன்கு அறிந்து கொண்டவர் அவர்.
எந்த கேள்வி எந்த விதத்தில் கேட்டாலும் அதற்கு கேள்வி கேட்டவரை திகைக்க வைக்கும் வகையில் பதில் சொல்பவர் கலைஞர். அவர் வழியில் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்த நிகழ்ச்சியானாலும் அதில் தனக்கு மாலை போடுவதோ துண்டு போடுவதோ வேண்டாம் எனக் கூறி புத்தகங்கள் மட்டும் அளித்தால் போதும் என்று அறிவித்தவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். தனக்கு கிடைத்த நூல்கள் அனைத்தையும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் நூலகங்களுக்கும் அனுப்பி வைத்து மாணவச் செல்வங்களின் அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள உதவி செய்தவர் முதல்வர்.
தந்தை ஒரு கோணத்தில் புத்தகத்தை பார்த்தால் அவரது மகன் வேறு கோணத்தில் புத்தகத்தை பார்க்கிறார். புத்தகம் வாசிப்பு முக்கியம் என்பதை உணர்ந்தது இந்த அரசுதான். உங்கள் அறிவாற்றலையும் நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்ள, வித்தாக இருப்பது புத்தகங்கள் தான்.புத்தகங்களை படித்து மனதில் ஆழமாக பதிவு செய்து கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .படிக்கும் புத்தகம் உங்களை மேம்படுத்த உதவும் முக்கிய கருவி.
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்க வேண்டும். இந்த புத்தகத்திருவிழாவில் விற்பனை இலக்கு ரூ. 3 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல எனது கல்லூரிநிறுவனங்கள் சார்பாக முதல் கட்டமாக இன்று ஒரு லட்சத்துக்கு புத்தகங்கள் வாங்குகிறேன். அடுத்த கட்டமாக ரூ.2லட்சத்துக்கு புத்தகங்கள் வாங்கிக்கொள்கிறேன் என்றார் அமைச்சர்ரகுபதி.
இதைத் தொடர்ந்து ஜூலை 30 அவரது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை, நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் மற்றும் புத்தகத்திருவிழா விழா குழுவினர் அமைச்சர் ரகுபதிக்கு விழா மேடையிலேயே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நினைவுப்பரிசுகளை வழங்கினர்.
கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை பேசியது: சமூக மாற்றத்துக்கான சிந்தனையை தூண்டும் அறிவு சுரங்கம் புத்தகங்கள். புதுக்கோட்டை புத்தக திருவிழா நடப்பது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது. இதை நடத்தும் மாவட்ட நிர்வாகத்துக்கும் புத்தக விழா குழு குழுவினருக்கும் வாழ்த்துகள். சாதாரணமான திருவிழா அமைச்சர்கள் பெருமுயற்சியால் ஆட்சியரின் ஒத்துழைப்பால் சாத்தியமாகி இருக்கிறது.
புதுக்கோட்டை அறியாமையில் மூழ்கியிருக்கிற மாவட்டம் என்று ஒரு விமர்சனம் இருந்ததுண்டு. ஆனால் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் ஆகியோரின் முயற்சியால் கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக மாறியது. ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமூர்த்தி, முத்துநிலவன் உள்ளிட்ட விழாக்குழுவினரின் கூட்டு முயற்சியால் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.
எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்த வளர்ந்த ஊரில் புத்தக திருவிழா நடப்பது பெருமைக்குரியது. தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளித்துள்ள தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 3 கோடியில் நூலகங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கியது கந்தர்வகோட்டை தொகுதியில் தான். சமூக மாற்றத்துக்கான சிந்தனை சிந்தனையை தூண்டும் அறிவுச்சுரங்கமாக திகழ்வது புத்தகங்கள் தான் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புத்தகத்திருவிழா திகழ்கிறது என்றார் எம்எல்ஏ சின்னத்துரை.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்து பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் ஐந்தாவது புத்தகத்திருவிழாவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்துவதால் சிறப்பு சேர்ந்துள்ளது. வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி ஜூலை 7 -ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டது.
அதில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என 2.50 லட்சம் பேர் வாசித்தனர். ஒரு காலத்தில் புத்தகங்களை வாசித்து விட்டு இரவில் உறங்கச் செல்வது வழக்கமாக இருந்தது ஆனால் தற்போது மொபைல் பார்த்து அதில் மூழ்கி உறங்கச் செல்வது நான் உள்பட அனைவரது வழக்கமாக உள்ளது. ஆனால் நம் மாவட்டத்தில் நடைபெற்ற புதுக்கோட்டை வசிக்கிறது என்ற நிகழ்ச்சிக்கு பிறகு நானும் இரண்டு புத்தகங்களை படிதது முடித்துவிட்டேன்.
ஒரு கதையில் ஒரு கவிதை உள்ள கருத்துகள் நம் வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்ன படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. படிக்கும் விஷயத்தை உள்வாங்கி கொள்வதுதான் முக்கியம். இந்த புத்தகத் திருவிழா எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுவது என்பதை சட்ட அமைச்சர் ரகுபதி உணர்த்தியுள்ளார்.
புத்தக திருவிழாவுக்கு முதலில் 80 அரங்குகள் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் தற்போது 100 அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. விற்பனை ரூ. 3 கோடி இலக்கை அடைய ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். படிக்கும் பழக்கத்தைஇளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல இந்த புத்தகத்திருவிழா மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் ஆட்சியர் கவிதா ராமு.
நகராட்சித் தலைவர் திலவதிசெந்தில் பேசியது: தமிழக முதல்வரின் ஆணைப்படி இந்த புத்தகத்திருவிழா புதுக்கோட்டையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தனக்கு எந்த அன்பளிப்பும் வேண்டாம், அதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுத்தால் போதும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி அதற்கு பொதுமக்களும் அதிகாரிகளும் அரசியவாதிகளும் பொது விழாக்களில் புத்தகங்களை பரிசாக அளித்து வருகின்றனர். இந்த புத்தகத் திருவிழா குழந்தைகளுக்கு அறிவுச்செல்வத்தை வழங்கும் சிறந்த களமாகும். எனவே இந்த புத்தக திருவிழாவில் குழந்தைகள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட நிருவாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை. 29 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடத்துகிறது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி. கருணாகரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்தளித்தார்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா. தமிழ்ச்செல்வி,. ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் கருப்புசாமி, முதன்மைகல்வி அலுவலர் மணிவண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், முகாம் உதவியாளர் ஆ. லெட்சுமணன், துரைஇளங்கோவன், அரிமளம் ஒன்றியக்குழு தலைவர் மேகலாமுத்து.
புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் நா. முத்துநிலவன், ம.வீரமுத்து, அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எஸ்.டி.பாலகிருஷ்ணன், மு. முத்துக்குமார், த விமலாவள்ளல், மு, கீதா, கிருஷ்ணவரதராஜன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆத்மாயோகா பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.