புதுக்கோட்டையில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த 100 அரங்குகள் மூலம் ரூ. 2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியரும் புத்தகத்திருவிழாக்குழு தலைவருமான கவிதா ராமு தெரிவித்தார்.
புதுக்கோட்டை டவுன்ஹாலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற புத்தகத்திருவிழா நிறைவு நாள் விழாவுக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியதாவது: நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்புகள் உலகப்புகழ் பெற்றவை. விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுத்தாளர், பேச்சாளர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர்.
மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த 10 நாள்களாக நடத்தி புத்தகத்திருவிழா பெரும் வெற்றி பெற்றுள்ளது. புத்தகத் திருவிழாவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் என 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதே போல பொதுமக்களும் 1 லட்சம் பேர் வந்துள்ளனர். மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை 25 ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்,
புத்தக விற்பனையைப் பொருத்தவரை, இதுவரை ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. நிறைவு நாள் விழாவுக்கு வந்திருக்கும் அனைவரும் புத்தகங்கள் வாங்கினால் விற்பனை ரூ.2.50 கோடியை எட்டிவிடும்.
புத்தகத்திருவிழாக்குழுவினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பணியால் இது சாத்தியமானது. புத்தகங்கள் நூறு நண்பர்களுக்குச் சமம் என்றார் ஆட்சியர் கவிதாராமு.
இதில், .மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)இரா.தமிழ்ச்செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட ஆட்சியரின் முகாம் உதவியாளர் ஆ. லெட்சுமணன் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, நா. முத்துநிலவன், அ. மணவாளன், ம. வீரமுத்து. முனைவர் ஆர். ராஜ்குமார், எஸ்.டி.பாலகிருஷ்ணன்,மு.முத்துக்குமார், கிருஷ்ண வரதராஜன், த. விமலா வள்ளல், மு.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.