Close
செப்டம்பர் 20, 2024 1:46 காலை

தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் பி. யு. சின்னப்பாவின் 71 வது நினைவு தினம் இன்று

புதுக்கோட்டை

பி.யு. சின்னப்பா நினைவுநாள் இன்று

தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பி யு சின்னப்பாவின் 71 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அனைவ ராலும் அழைக்கப்பட்ட பி. யு. சின்னப்பாவின் 71 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் சூழலில் இவருக்கான மணி மண்டபத்தை விரைந்து தமிழக அரசு அமைத்திட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்

புதுக்கோட்டை நகராட்சி 40 -ஆவது வார்டு சின்னப்பா நகர் 3-ஆம் வீதியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் பொதுமக்கள், கலைத்துறையினர், அரசியல் கட்சியினர் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய எழுத்தாளரும் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான கவிஞர் தங்கம்மூர்த்தி கூறியதாவது:

புதுக்கோட்டை
நடிகர் பி.யு. சின்னப்பா நினைவிடத்தில் கவிஞர் தங்கம்மூர்த்தி

5.5.1916 ல் பிறந்த புதுக்கோட்டை உலகநாத பிள்ளை சின்னப்பாதான்  பி.யு.சின்னப்பா ஆனார். மாத சம்பளம் ரூ15 க்கு மதுரை பாய்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். கற்றுக்கொள்ளாத கலைகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். நான்காம் வகுப்பு தான் படித்தார்.

1936 ல் திரையில் அறிமுகமானார். 1940 ல் வெளிவந்த உத்தம்புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.  தமிழ்த் திரையில் அதுவே முதல் முறை.  இரு சின்னப்பாக் களும் கத்திச் சண்டை போடுவார்கள். அப்படி அசத்திய முதல் நடிகர் இவர்.

தனது 19வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார், போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரந்தூக்குவதில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

உத்தமபுத்திரனில் இரட்டை வேடம். மங்கையர்கரசியில் மூன்று வேடம். ஜகதலப்பிரதாபனில் ஐந்து வேடம். காத்தவராயனில் பத்து வேடம் என்று தமிழ்த்திரையுலக வரலாற்றில் இந்த சாதனையை முதல் முதலாக நிகழ்த்தியவர் பி. யு. சின்னப்பா.1936 முதல் 1951 வரை தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டார் இவர்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாரதியாரின் பாடலை முதன் முதலாக திரையில் பாடி நடித்தவரும் இவரே. ‘ஒரு உரையில் இரண்டு வாள் இருக்கமுடியாது’ என்ற வசனம் மிகப்பிரபலம். இவர் தான் அதனைப் பேசியவர்.

குரலெடுத்துப் பாடினால் ஒரு மைல் தாண்டிக் கேட்கும் கம்பீரக் குரல். புதுக்கோட்டையில் தன் வீட்டருகே இருக்கும் தடிகொண்ட அய்யனாரை வழிபட்டு வந்தார். வடக்கு 4 ஆம் வீதியில் தனக்கென ஒரு நாடக கம்பெனி வைத்திருந்தார். தனக்கு நிகர் எவருமில்லை என திரையிலகில் நிரூபித்தார். கட்டுமஸ்தான உடல் வாகு பலரையும் கவர்ந்து இழுத்தது. எம் ஜி ஆர் அவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக பி.யு. சின்னப்பா இருந்தார்.

புதுக்கோட்டையில் ஒரே தெருவில் உள்ள எல்லா வீடுகளையும் வாங்கிக் குவித்தார். இனி இவர் சொத்துவாங்கக் கூடாது என அன்றைய சமஸ்தானம் தடைவிதிக்கும் அளவுக்கு அதிக சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.  அன்று அப்படி சம்பாதித்தவர்.

புதுக்கோட்டையில் ‘சின்னப்பா பூங்கா’ ‘ சின்னப்பா நகர் ‘ என்ற பெயர்கள் மட்டுமே இன்று உள்ளன.  ஒரு காலடி இடம் கூட அவருக்கு இல்லை.
தமிழ்த்திரை உலகில் தவிர்க்க இயலாத பெயர் பி. யு. சின்னப்பா.  23.9.2022  இன்று அவரது நினைவு நாள். தனது 35 ஆவது வயதில் மறைந்த அவர் புகழ் என்றென்றும் நிலைக்க அவருக்கு ஒரு சிலை, அவர் பெயரில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென புதுக்கோட்டை மக்களும் அவரது ரசிகர்களும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top