நாடு, கடல், மொழி, இனம், எல்லைகளைக் கடந்து மானுடம் பொதுவானது என்பதை உலகத் திரைப்பட விழா நமக்கு உணர்த்துகிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத் திரைப்படவிழா புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கில் அக்.14 முதல் 18 வரை நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவின் செவ்வாய்க்கிழமை பங்கேற்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
சமீபத்தில் தமிழில் முற்போக்குக் கருத்துகளைத் தாங்கி வரும் படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத் திரைப்பட விழாவை நடத்துவதன் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் தனி முத்திரை பதித்துள்ளது. தமுஎகச-வின் இத்தகைய நகர்வு பண்பாட்டுத் தளத்தின் அழுத்தமான பதிவாகப் பார்க்கிறேன்.
இங்கே திரையிடப்பட்ட படங்கள் கடல், நாடு, மொழி, இனம், எல்லைகளைக் கடந்து மனிதம், மாண்பு, அன்பு, அறம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மானுடம் பொதுவானது என்பதை உணர்த்துகிறது. காதல் திருமணம், மறுமணங்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் மிகப்பெரிய கலவரங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலை நாடுகளில் இவை மிக இயல்பாக நடப்பதை இப்படங்கள் நமக்கு உணர்த்துகிறது.
உத்திரப்பிரதேசம் முசாபர் நகரில் நடைபெற்ற மதக் கலவரத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஓராண்டுக்கு முன்பாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர். மோடி அரசை பணியவைத்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றனர்.
ஆனால், அதற்குப்பிறகு நடைபெற்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதிலிருந்து வெறுப்பு அரசியல் வறுமையைத் தோற்கடித்து விட்டது என்பதை உ.பி. தேர்தல் நமக்கு உணர்த்துகிறது. எனவே, பண்பாட்டுத் தளத்தில் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற உலகத் திரைப்பட விழாக்கள் பயனளிக்கும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.