இசைத்துறையில் ஜாம்பவான். ஆறு முறை பெற்ற தேசிய விருதுகள் உட்பட எஸ்பிபி பெற்ற விருதுகள் எண்ணிக்கையில் அடங்கா. 40000 பாடல்களுக்கு மேல் பாடி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவானவர், இசை ரசிகர்கள் மனம் கவர்ந்த எஸ்பிபி. இவை எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் மனம் கவர்ந்த, யார் மனதையும் புண்படுத்தாத மாபெரும் கலைஞன்.
முதியோர்களையும், இசை துறையின் அனுபவஸ்தர்களையும் எப்போதும் மதித்து அவர்களின் ஆசிகளைப் பெற்ற நல்ல மனிதர். சினிமா துறையில் இருக்கும் இளம் இசை அமைப்பாளர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இசையில் பாடல்கள் பாடி, அவர்களை ஊக்கப்படுத்தும் பெரிய மனம் படைத்தவர்.
சினிமாத் துறைக்குப் புதிதாக பாட வருகின்ற அடுத்த / இளைய தலைமுறையினரைத் திறந்த மனதுடன் வரவேற்று, அவர்களையும் ஊக்கப்படுத்தும் குணம் கொண்ட நல்ல பண்பாளர். தான் கலந்து கொள்ளும் எல்லாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், குழந்தைகளையும், சிறுவர் சிறுமிகளையும் ஊக்குவித்து, தான் பாடிய பாடல்களை அவர்கள் முன் அழகாகப் பாடி, எப்படி ரசிக்கும் படியாக பாடலைப் பாட வேண்டும் என அன்போடு அறிவுரை வழங்கியவர் அந்த குழந்தை மனது கொண்ட பாலு.
பல சமயங்களில் எனது மகிழ்வுந்தை, சாவி போட்டு உசுப்பியவுடன் கைகள் அனிச்சையாக குறுவட்டு இயக்கியை ஒலிக்க செய்து விடுகிறது. பல மணி நேரங்கள் வாகன நெரிசலில் சிக்கினாலும் பாலுவின் தயவில் எரிச்சலடை யாமல் வண்டியோட்ட முடிகிறது.
தேநீர் கடைக்காரர், முடி திருத்துபவர், மூட்டை தூக்குபவர், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் என இப்படி பல சாமான்யர்கள் பாலா பாடிய பாடல் வரிகளை நாக்கு நுனியில் வைத்திருக் கிறார்கள். பாடலுக்குரிய பின்னணி இசையை கூட சில ஓட்டுநர்கள் வாயிலேயே வாசித்து விடுவார்கள்.பயணிக்கும் போது பார்த்திருக்கிறேன்.
நீங்களும் நானும் கூட இதை நம்மையறியாமல் வாகனம் ஓட்டும் போது செய்திருப்போம் தன்னிச்சையாக.., நான் நீங்கள் உட்பட இவர்களுக்கும் அடானா ராகத்திற்கும், சஹானா ராகத்துக்கும் வித்தியாசம் தெரியாது தான். ஆனால் மனதார ரசிக்க தெரியும். காரணம் பாலு..,
சில கந்தர்வர்கள் இந்த பூவுலகில் அவதரித்து, தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி விட்டு மீண்டும் தேவலோகம் சென்று விடுவார்கள். பாலுவும் ஒரு கந்தர்வர். எளிய மக்களின் துயரை, வலியை, பிணியை, மறக்கடிக்க செய்த ஒரு கந்தர்வர்.
நாமெல்லாம் ரசிக்கும்படியாக பல பாடல்களுக்கு மெட்டுப் போட்ட பல இசையமைப்பாளர்களுக்கு, அவர்கள் ஆத்மார்த்தமாக ரசிக்கும் பாடல் அல்லது அவர்கள் படைப்பில் ஆக சிறந்த பாடல் என்கிற ஒரு பட்டியல் இருக்கும். அவற்றில் கட்டாயம் பாலு அவர்கள் பாடிய பாடல் இருக்கும்.
அரக்க பேரிடர், பல பேரை இரக்கமில்லாமல் அள்ளி சென்றுவிட்டது. அந்த பேரிடர் கொள்ளையடித்துச் சென்ற நாட்டின் செல்வங்களில் இன்று பாலுவும் ஒருவரானார். நம்மை விட்டு பிரிந்தாலும் பாடல்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் பாலு.
கலைஞர்கள் தொடுவது நம் இன்னுணர்வின் ஒரு பகுதியை மட்டுமே; இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு, ஆத்ம திருப்தியைக் கொடுத்து, எதிர்கொள்ளும் துன்பங்களை மறக்க வைக்கிறார்கள்.இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..உண்மை தான்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#