Close
ஜூலை 7, 2024 10:39 காலை

சினிமா..  சித்தா – திரைப்பட விமர்சனம்..

இங்கிலாந்து

சினிமா விமர்சனம்- சித்தா

 சித்தா – திரைப்பட விமர்சனம் எனது திரைப்பார்வையின் தொடக்கத்திலேயே சொல்லி விடுகிறேன்..குட் டச், பேட் டச் பற்றி பேசுகிற இந்த படம் உண்மையில் குட் டச் என்று..

சின்னஞ்சிறு சிறுமிகளை மட்டுமே குறிவைத்து அவர்களை சீரழித்து பின்னர், அவர்களை எரித்து கொல்லுவது. இந்த கதையை சித்தார்த் 22 வருடங்களுக்கு முன்னரே தயார் செய்து வைத்திருந்ததாக ஒரு முறை சொல்லியிருந்தார்.

அவர் தான் தயாரிப்பாளர். அவர் தான் நாயகன். இரண்டு பொறுப்புகளையும் சிறப்பாக செய்துள்ளார். 180, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய இரண்டு படங்களில் என்னை வெகுவாக கவர்ந்த சித்தார்த்தின் எல்லாப் படங்களும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.

சிறார் மீதான பாலியல் வன்முறை, அது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வ தற்குத் தேவையான புரிதல் ஆகியவை தொடர்பான சமூக விழிப்புணர்வுப் படத்தை, ஆவணப்படம் போல் அல்லாமல், பிரச்சார நெடி இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.

பரப்பரப்பான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், அபாரமான காட்சிமொழி, தெளிவான சமூக, அரசியல் புரிதல் ஆகியவற்றுடன் மேம்பட்ட படைப்பாகக் கொடுத்திருக்கிறார்.

பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிலிருந்து மீண்டு வந்துநிம்மதியாக வாழ்வதற்கானச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாகக் குற்றவாளிகளைப் பழிவாங்குவதில் சில ஆண்கள் முனைப்புக் காண்பிப்பதை யும், குடும்ப கௌரவம், வீரம், மானப்பிரச்னை என அதன் பின்னால் இயங்கும் ஆணாதிக்க விழுமியங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதும் வரவேற்புக்குரியது.

பொன்னியும், சுந்தரியும் தனியாக ஓர் இடத்துக்குப் பயணிக்கும் இடத்தில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு, இறுதிவரை தொய்வின்றித் தொடர்கிறது. குறிப்பாகச் சுந்தரி தொலைந்துபோகும் இடைவேளைக் காட்சியும், இரண்டாம் பாதியில் வரும் வாகனப் பரிசோதனைக் காட்சியும் பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுகின்றன.

:குற்றவாளிகள் பெரும்பாலும் குழந்தைகளை பல நாட்களாக நோட்டம் விடுபவர்களாக தான் இருக்கிறார்கள். குழந்தை களின் பலஹீனம், ஆர்வம் போன்றவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார்கள் என்பது தான் படத்தில் சொல்லப் படும் முக்கிய கருத்து.

சித்தார்த், சிறுநகரத்து இளைஞனாக மாறியிருக்கிறார். அண்ணன் மகளிடம் அன்பு காண்பிப்பது, பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வது, தன் மீது காண்பிக்கும் கோபத்தைக் கடந்துசெல்வது எனக் கனிவும் முதிர்ச்சியும் மிக்கவராக நம் மனதில் பதிந்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் சித்தார்த்தை தவிர வேறு யாரையும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த படத்தில் நாயகன், நாயகி, நகைச்சுவை என சிலவற்றை மட்டுமே மையப்படுத்தி, கதையை நகர்த்தி செல்கிற வழக்கமான சினிமா மாதிரி வடிவுரு எதுவும் இல்லாமல், நாம் தினசரி சந்திக்கிற கதாபாத்திரங்களை வைத்து ஒரு அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார் அருண்குமார்.

சுந்தரி, பொன்னி என இரண்டு பெண் குழந்தைகள் நடித்துள்ளார்கள். எப்படி எட்டு வயசு குழந்தைகளால் இப்படி கனமான கதாபாத்திரத்தை உள் வாங்கிக்கொண்டு அப்படியே தத்ரூபமா கதாபாத்திரமாகவே நடித்தார்கள் என வியக்க வைக்கிறார்கள்.

நகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி தான் படத்தின் நாயகி. இதுவே தமிழ் படத்திற்கு புதுமை. பெரிதாய் ஒப்பனை இல்லாமல் இயல்பாய் காட்டியிருக்கிறார்கள்.சிதார்த்தின் நண்பனாக வரும் பாலாஜி காவல்துறை அதிகாரியாக, உற்ற தோழனாக மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.

சிறார் பாலியல் வன்முறையை எப்படித் தடுப்பது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘சித்தா’
இந்த மாதிரியான நல்ல படங்களை வெளியான அன்றே பார்க்க முடியாமல் போனதில் சற்று வருத்தம் இருந்தாலும்
இந்த படத்தை பார்க்காமல் தவற விட்டிருந்தால் தான் வருத்தமாக இருந்திருக்கும்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top