திரைப்படம் வெளியிடுவதில் எம்.ஜி.ஆருக்கு கலைஞர் நெருக்கடி கொடுத்த போது சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தனர். இவர்கள் இருவரது ரசிகர்கள் எங்கள் தலைவரை போல வருமா என்று மாறி மாறி போட்டிப் போட்டுக் கொண்டனர். அன்றிலிருந்து இன்று அஜித் – விஜய் வரை இந்த போட்டி இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால், நடிகர்களுக்குள் எந்த போட்டியும், பொறாமையும் இல்லாமல் சொந்த வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
ஒரு பேட்டியில் இதயக்கனி விஜயன், எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து பேசுகையில்…
சிவாஜியும், எம்.ஜி.ஆரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். எம்.ஜி.ஆர் படங்கள், சிவாஜியின் படங்களின் பிரீமியர் ஷோ என்றால் இரு குடும்பத்தாரும் போய் பார்ப்பதும் வழக்கமாம். இப்படி இருவரும் நெருங்கிய உறவினர்கள் போலத்தான் இருந்து வந்தனர்.
எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்ததாம். அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசு அதாவது திமுக அரசு படம் வெளியிடுவதை தடுத்தார்களாம். தியேட்டர்கள் கொடுக்கக் கூடாது என்றும் கூறினார்களாம். இதனால், எம்.ஜி.ஆர் மனதளவில் பெரிதும் வருத்தப்பட்டார். அப்போது சிவாஜி தாமாகவே முன்வந்து எம்ஜிஆரிடம் அண்ணே! யார் கொடுக்கலைனாலும் பரவாயில்லை, என் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், நான் தருகிறேன் என்று கூறினாராம் சிவாஜி. இல்ல சிவாஜி. இப்படி செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறியுள்ளார்.
ஆனால், படம் வெளியாகும் போது அதன் பிரீமியர் ஷோவை சிவாஜி கணேசன் தியேட்டரில் தான் வெளியிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். என்று தெரிவித்தார்.