Close
செப்டம்பர் 18, 2024 12:35 காலை

படையப்பா நீலாம்பரி ‘மின்சார பூவே’ பாடல் உருவான விதம் இப்டித்தான்..!

படையப்பா படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன்

இந்தப் பாடல் ரஜினிகாந்தையே எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு பெண் பாடுற பாட்டு. திமிரும், கர்வமும், அகம்பாவமும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தோட வேண்டும் என்பது தெரிந்தவுடன், A.R.ரஹ்மான் “கூப்பிடுங்க அந்த நித்யஸ்ரீ யை” என்றார்.

நித்யஸ்ரீ அதற்கு முந்தைய வருடத்தில்தான் ( பத்து வருடங்களாக கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்றவர்) ரஹ்மானின் ஜீன்ஸ் படத்தில் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை அட்டகாசமாகப் பாடி தமிழ் சினிமாவில் அடியெடுத்து பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகி ஆச்சரியப்பட வைத்தார்.

இந்தப் பாடல் ஒரு போட்டிப் பாடல். படையப்பாவுக்கும் நீலாம்பரிக்கும் இடையில் நடக்கும் ஒரு உணர்ச்சிமிகு போராட்டம். ஒரு அகம்பாவம் கொண்ட பெண்ணின் மனதில் அடக்கிவைக்கப்பட்ட காதலின் உணர்ச்சிமிகு கொந்தளிப்பு. படையப்பா பாட நீலாம்பரி பாடலுடன் ஆடலும் சேர்த்து இருப்பதாக கட்சி வைக்கப்பட்டது.

‘மின்சார பூவே என்று ஆண் துவங்கும் வரிகள் முதலில் “செளக்கியமா கண்ணே செளக்கியமா” என்றுதான் இருந்ததாக தெரிகிறது. (‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் ரஜினியும் சத்யராஜும் ‘என்னம்மா கண்ணு செளக்கியமா’என்று பாடுவார்களே, அது மாதிரி) அப்புறம் பாடல் வளர்கையில் மின்சார பூவே , மின்சார கண்ணா என்று புதிய வரிகள் பரிணமித்தது. (பின்னாளில் செளக்கியமா கண்ணே செளக்கியமா என்கிற அந்த வரிகள் சங்கமம் படத்தின் பாடலாகி நித்யஸ்ரீயால் புகழடைந்தது தனிக்கதை).

சிச்சுவேஷனை சொல்லி அதற்கேற்ற மாதிரி கச்சிதமான வரிகளைக் கேட்டவுடன் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு சொல்லவா வேண்டும்? தன் பங்குக்குப் பாடலை அனாயாசமாக தனது வரிகளால் நறுக்குத் தெறித்திருப்பார் போல எழுதி இருந்தார்.

நீலாம்பரி படையப்பாவை விரும்பினாலும் “ஹேய் யூ, ஐ லவ் யூ. பதிலுக்கு புளகாங்கிதத்தோடு லவ் யூ சொல்லி காலமெல்லாம் என் காலடியில் விழுந்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்” என்று இறுமாப்போடு காதலை யாசகம் தரும் கேரெக்டர்.

அதற்கு மிகச் சரியாக ஒரு வரி படையப்பாவின் மீதான காதலை, அவனுடைய உன்னத குணாதிசயங்களைச் சொன்னாலும் அடுத்த கணமே தனது ஈகோவை, அகம்பாவத்தைக் காட்டும், தன்னை முன்னிலைப் படுத்துமாறு இருக்கும் செருக்கை அடுத்த வரியிலேயே தப்பாமல் வந்து விடுமாறு எழுதியிருப்பார்.

முதல் வரி “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்” என்று சொல்லி விட்டு உடனேயே ”என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்” என்றும் ”வானம் வந்து வளைகிறதே” என்று சொல்லி விட்டு உடனேயே “காதலிக்க வா” என்று கூப்பிடாமல் “வணங்கிட வா” என்றும் வெல்லுஞ்சொல் இல்லாததாய் வெளுத்து வாங்கி இருப்பார்.

பாடலின் ஆண் குரலுக்கு ஹரிஹரன் வந்து பாடிக் கொடுத்து விட்டுப் போயாயிற்று. அந்தப் பாடலின் ஆண்குரலுக்கு ட்ராக் பாடியது ஸ்ரீனிவாஸ். கெமிக்கல் இஞ்சினியர். சில திரைப்பட பாடல்களைப் பாடி புகழடைந்து வந்திருந்தார். என்ன நினைத்தாரோ ரஹ்மான், ஸ்ரீனிவாஸைக் கூப்பிட்டு, ஹே, அந்த மின்சார பூவே, அதுல உன்னோட வெர்ஷனையே ஃபைனல் பண்ணிட்டோம். நல்லா இருக்குது” என்றவுடன் இன்ப அதிர்ச்சி.

ஹரிஹரன் வெர்ஷனை விட ஸ்ரீனிவாஸின் வெர்ஷன் கம்பீரமாக இருப்பதாக ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் அபிப்ராயப்பட்டனராம். அப்போது ஸ்ரீனிவாஸிற்கு ஹரிஹரன் எல்லாம் அண்ணாந்து பார்க்கும் லெஜண்ட் பாடகர். இந்தப் பாடலைப் பாட ஸ்ரீனிவாஸிற்கு பத்து நிமிடங்களே கொடுத்தாராம் ஏ.ஆர்.ஆர். அந்தப் பத்து நிமிடங்களில் பிரமாதமாகப் பாடி பாடலில் காதலோடு கம்பீரத்தையும் கலந்து அடித்து ஆடியிருப்பார்.

பாடலைப் படமாக்கிய விதமும், ஓளிப்பதிவு, நடனம் என்று எல்லாமே இசைக்கும் பாடலுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் அட்டகாசமான எஃபெக்டில் அமைந்திருக்கும். நீலாம்பரி அகம்பாவத்தின் அல்டிமேட் ஐடெண்டிடியாகவே தன் முக பாவங்களையும், பாடி லாங்வேஜையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தி படையப்பாவையே விஞ்சுவார். (கோரியோகிராஃபி- லலிதாமணி)

நித்யஸ்ரீ பாடலைப் பாடிச் சென்ற அனுபவத்தைப் பற்றி ஸ்ரீனிவாஸ் சொல்வது. அவங்க வந்தாங்க. ஒரு புயல் மாதிரி வந்து அசர அடித்துப் பாடி விட்டு எங்களை பேச்சு மூச்சில்லாம செஞ்சுட்டுப் போய்ட்டாங்க என்பதாய் அதை நினைந்து வியக்கிறார்.

இப்படி எல்லா டிபார்மெண்ட்டும் தன் உசிரைக் கொடுத்து பெஸ்ட்டைக் கொடுக்கும் பாடல் பரிமளிப்பது மிகச்சிலவே. இந்தப் பாடல் இதை இசைத்தவர்களின் உன்னதத்தை மட்டுமல்ல, அங்குலம் அங்குலமாக ரசிப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் உச்சத்தில் தொட வைக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top