ரஜினிக்கு நடிக்கத் தெரியாது என்று யாராவது சொல்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு சொல்லட்டும்.
“தப்புத்தாளங்கள்” இது ரஜினி நடித்து வெளிவந்த திரைப்படம்.
ரஜினிக்கு நடிக்கத்தெரியாதுன்னு யாராவதுசொன்னா அவர் நிச்சயம் தப்புத்தாளங்கள் பார்த்திருக்க மாட்டார்.
என்னா ஒரு நடிப்பு?
தேவுங்கிற ரௌடி கேரக்டர். கையால் சொடக்குப்போடும், மூக்குப்பொடி போடும்,கழுத்தில்சைக்கிள் செயினோட சுத்தும் ரௌடி.
தேவுவை சமூகமே ரௌடியாக்குகிறது. முதலில் அம்மா. பின் அம்மாவின் இரண்டாவது கணவர். அப்புறம் அரசியல். அவனுக்கு ஒரே எதிரி சமூகம் மட்டுமல்ல. தன் அம்மாவுக்கு பிறந்த தம்பி சோமா. சோமா ஒரு கள்ளச்சாராய வியாபாரி. தேவுவும், சோமாவும் ஓரே அம்மாவிடம் பால் குடித்து வளர்ந்தாலும் பரமவைரிகள்.
ஒரு போலீஸ் துரத்தலில் சரசு ஏன்கிற விபச்சாரி வீட்டில் ஒளிந்து கொள்ளும் தேவு கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதினுள் நுழைகிறான். ஆனாலும் சமூகம் அவர்களை நல்லவர்களாக வாழவே விடாது என்பதே நிஜம். அவர்கள் புதிய வாழ்க்கை தொடங்கி தப்பே செய்யக்கூடாது என்று வைராக்கியமாக வாழ்ந்து குழந்தையும் உருவாகி அதுவும் கரு கலைந்து இரண்டு பேரும் கடைசியில் ஒரே போலீஸ் வண்டியில் பயணிப்பது வரை நம் கண்களில் ஈரம்..
ரஜினியின் முக பாவனைகள் அசத்தல். அதிலும் தலையை சீவி பின் கலைத்து விடும் ரஜினியின் ஸ்டைல்… ரஜினி, சரிதா இருவரையும் கே.பி நன்றாகவே நடிக்க வைத்திருக்கிறார். அதுவும் சரிதாவை AKM, AKM எனத்திட்டி..திட்டி…
ரஜினி, சரிதா, கே.பி மூன்று பேருமே இந்தப்படத்துக்குப்பின் வேறு வழியில் பயணிக்க தொடங்கினர். இது தான் அவர்களின் கடைசி க்ளாசிக்.
படத்தில் நடிகர் சாந்தாராம் ஒரு பிம்ப்பா நடிச்சிருப்பாரு. பஸ்ஸ்டாண்டில் யாராவது இறங்கினா, “என்ன சார் லாட்ஜ் வேணுமா”ன்னு பேச்சு கொடுத்து சரிதாவோட வீட்டுக்கு அனுப்புவார். பார்ட்டிக்கிட்ட அவர் பணம் வாங்கும் போது சுவத்துல சிபிஐன்னு போட்டு அவங்க சின்னம் போட்டிருக்கும். தொழிலாளர் கட்சி. அவர் நடந்து போய் ஓரிடத்தில் தன் பாக்கெட்டிலிருக்கும் பணத்தை எண்ணுவார். அங்கே Have you paid your income taxன்னு இருக்கும்.
சரிதா தொழிலை நிறுத்தியதும் சாந்தாராம் வேறு ஒரு பிம்ப்போடு சேர்ந்து கூட்டு தொழில் செய்வார். ஒரு கஸ்டமரை அழைத்துக்கொண்டு போனால் அங்கு அவர் மகளே இருப்பார். அதைப்பார்த்ததுமே அடுத்த காட்சியில் மூவருமே பிணமாவார்கள். மானம் என்பது தன் வீட்டுக்கும் உண்டு என்பதை மாமா சாந்தாராம் கேரக்டர் மூலம் உணரமுடியும்.
சரஸ் என்று அழைத்துக்கொண்டு வரும் வடஇந்திய இளைஞராக கமல். சோடா புட்டி கண்ணாடி, பல் என அப்போதே மேக்கப் மாற்றி நடித்திருக்கிறார்.
சோமாவாக கன்னட நடிகர் சுந்தர்ராஜ். சோமாவை காதலிப்பவராக அவர் மனைவி பிரமீளா(வைதேகி காத்திருந்தாள் பரிமளம்). சோமாவாக சுந்தர் ராஜ் செம துள்ளல் நடிப்பு.இளவட்ட ரௌடியாகவே வாழ்ந்திருக்கிறார். டயலாக் டெலிவரி கூட அம்சம். சரிதாவை துகிலுரிக்க பிடித்துக்கொள்ளும் ரௌடிகளில் ஒருவராக வினோத் நடித்திருக்கிறார். பின்னாளில் தெலுங்கு படங்களில் வில்லனாக வந்தவர்.
இசை விஜயபாஸ்கர். ‘அழகான இளநங்கை’ பாடல் வாணி ஜெயராம் குரலில் ஒரு வசந்தம் பூப்பது போன்ற இனிமை. ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’ பாடல் அன்றைய ரேடியோ ஹிட். தப்புத்தாளங்கள் பாடல் படம் முழுக்க வந்து வந்து போகிறது. இதே ஸ்டைலைத்தான் பின்னாளில் விசு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் செய்திருப்பார்.
படம் முழுக்க நாம் பார்க்கும் போது வேறொரு ரஜினி தான் தெரிகிறார். வேறொரு நடிகரோ என நினைக்கும் அளவுக்கு அவர் பேச்சு, எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. சரசுவைப்பத்தி உனக்குத்தெரியாது என சோமாவிடம் சவால் விடுவதும்,
அதற்கு சோமா ‘அவள் உடம்பு முழுக்க எத்தனை மச்சம்னு நான் வச்சிருக்கேன்டா கணக்கு’ன்னு சோமா சொன்னதோம் கலங்கி நிற்கும் ரஜினி, முதன் முதலாக சரிதாவை கிழிந்த உள்பாவாடையில் பார்த்ததும் அவர் ஓடிப்போய் பாவாடையை திருடுவதும், காசை வைத்துவிட்டு வந்தாலும் அடி வாங்குவதும் சரிதாவிடம் கலங்குவதும்….நடிகன்யா….!!
இந்தப்படம் கன்னடம்-தமிழ் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. 1978ல் தீபாவளிக்கு இப்படத்தோடு ரஜினியின் தாய்மீது சத்தியம், அவள் அப்படித்தான் படங்களும் வெளிவந்தன. மலையாளத்தில் ஜெயன்-சுபா நடித்தனர். தயாரித்து, இயக்கியது நடிகை சரண்யாவின் தந்தை ஏ.பி.ராஜ். சோமாவாக நடித்தது பிரித்விராஜின் அப்பா சுகுமாரன்.
தப்புத்தாளங்கள்…..ஆம் இந்தப்படத்தை பார்க்காமல் ரஜினிக்கு நடிப்பு வராது என சிலர் போடும் தப்புத்தாளங்கள்தான். தப்புக்கணக்கு.