Close
நவம்பர் 2, 2024 12:18 காலை

வேட்டையன்… திரைவிமர்சனம் .. இங்கிலாந்திலிருந்து சங்கர்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

வேட்டையன்-திரைப்பார்வை

ஒரு அப்பாவி மீது குற்றம் சாட்டப்படும் போது, அதிகாரத்திற்கு இரையாகி விடும் கொடூரமான உண்மைகளை அழுத்தமாக படமாக எடுத்துள்ளார் இயக்குனர் டி.ஜே.ஞானவேல்.

என்கவுன்ட்டர் கொலைகள் மற்றும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் கொடுக்கும் அழுத்தம் போன்ற சமூகக் கருப்பொருள்களை வெளிக்கொணரும், ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை மையமாக வைத்து வேட்டையன் மூலம் ஒரு விழிப்புணர்வு கொணர்ந்திருக்கிறார்.
இயக்குனரின் முந்தைய படைப்புகளுக்கு தொடர்பில்லாத இரண்டு தலைப்புகளை ஒருங்கிணைத்து, யூகிக்கக்கூடிய வகையில் ஒரு படத்தை தந்திருக்கிறார்.

முதல் பாதியில் சாதுரியமான விவரிப்பு, ரஜினிகாந்த் என்கிற உச்ச நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பாமல், தன் நெறியாள்கையை நம்பும் இயக்குனரின் திறமை தான், படத்தைச் சரியாக கொண்டு செல்கிறது.

எஸ்பி அதியன் (ரஜினிகாந்த்) ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட், அவர் சட்டத்தை மீறினாலும், விரைவான நீதியை நம்புகிறார். அநீதியை அம்பலப்படுத்துவதில், உறுதியாக நிற்கும் பள்ளி ஆசிரியை சரண்யாவை (துஷாரா விஜயன்) சந்திக்கும் போது அவரது வாழ்க்கையில், ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சோகமான நிகழ்வுகளில், அவள் கொலை செய்யப்படுகிறார். அதியனைக் கேள்விகளின் குளத்தில் தள்ளுகிறது அந்த துன்பியல் நிகழ்வு. அவளைக் கொன்றது யார்?. பின்னர் அவர் குற்றவாளியைப் பிடிக்க முடிவு செய்து, கார்ப்பரேட் மன்னரான நடராஜை (ராணா டக்குபதி) சந்திக்கிறார்,
நடந்த குற்ற பின்னணிகளுக்கு பின்னால் இருக்கும் பல சமூக பொருளாதார சீர்கேடுகளை கண்டறிந்து, பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுத்துகிறார்.சட்டத்திற்கு புறம்பான கொலைகள் என அறியப்படும் என்கவுன்ட்டர் கொலைகள், இந்தியாவில் பரவலான ஒன்று.

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சட்டம், ஒழுங்கை அமல்படுத்துவதற்கான சரியான முறையாகக் கருதுகின்றனர். இதற்கு ஆதரவு இருந்தபோதிலும், என்கவுன்ட்டர் கொலைகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும், சட்டம் சரியான தண்டனை முறையை ஆணையிடுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியாக கருதப்படுகிறார் என்கிற கூற்று வலுக்கிறது. என்கவுன்டர் சரி தவறு என்பது சமமாக பார்க்கப்படுகிறது.

வேட்டையனின் சுவாரசியமான கதைசொல்லல், சரண்யாவுக்கு எதிரான கொடூரமான குற்றத்தை காட்ட முடிவு செய்யும் போது, பாலியல் குற்றத்தை உள்ளடக்கிய ஒரு அத்தியாயத்தை மறுபரிசீலனை செய்வது, ஒரு பெண் சமூக பொறுப்புடன் போராடும் போது, பொது வெளியில் அவள் எவ்வளவு மோசமான தோல்வியைச் சந்திக்கிறாள் என்று நமக்குச் சொல்கிறது. மனதை உலுக்கும் காட்சிகள் அவை.

நடிப்பைப் பொறுத்தமட்டில், ரஜினிகாந்த் (எஸ்.பி. அதியன்) கல்வி முறையை அம்பலப்படுத்தும் கட்டத்தில், அதற்கு எதிராக குரல் கொடுக்க முயலும்போது, தனது வழக்கமான அட்டகாசமான அவதாரத்தைக் காட்டுகிறார். ரித்திகா சிங், குண்டர்களை ஒரு பஞ்ச் மூலம் எதிர் கொள்ளும் போலீஸ் நேர்மையான அதிகாரியாக படம் நெடுக வருகிறார்.

கண்களில் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஆசிரியையாக துஷ்ரா விஜயன் ஜொலிக்கிறார். மஞ்சு வாரியர் பங்களிப்பு குறைவு, ஃபஹத் ஃபாசிலின் பாத்திரம் நிறைவு. ராணா டக்குபதி, தோல்வியிலும் தன்னம்பிக்கையுடன் நடந்துகொள்ளும் துணிச்சலான எதிரியாகத் தோன்றுகிறார்.

அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு ஒரு புதிய மற்றும் சுறுசுறுப்பான அதிர்வை வழங்குகிறது. இருப்பினும் படம் நெடுக ஒலிக்கும், ஒரே மாதிரியான பிஜிஎம் சலிப்பை தருகிறது. கெட்டவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மால் உணர முடிகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள் கணிக்கக் கூடிய அளவுக்கு படமும் நீள்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை கதை அம்பலப்படுத்தும் அதே வேளையில், படத்தின் வணிக வடிவம், கோட் சூட்களில் அலங்கரிக்கப்பட்ட பவுன்சர்கள் வடிவில் வருகிறது, ரஜினிகாந்த் ஒற்றைக் கையால் கெட்டவர்களைத் தூக்கி எறிந்து, உங்கள் 10 நிமிட டெலிவரி செயலியைப் போலவே விரைவாக ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து வந்து, அதிரடி காட்டுவது யதார்த்தத்தை எட்டி உதைக்கும் காட்சிகள். கைத்தட்டி விசில் அடிக்க வைக்கிறது.

ஜெயிலர் போன்றே வேட்டையனும் ஜெயிக்க முடியாத நாயகனாக ஜொலிக்கிறார். அந்த பாத்திரத்தை வைத்து, அந்த சூத்திரத்தை சுற்றி ஒரு திடமான கதைப்பின்னல் மூலம்ரசிகர்களை திருப்திப்படுத்த முடியும், பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையும் உயரும் என இயக்குநர், அவற்றைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.வெற்றியும் அடைந்திருக்கிறார்.

இருப்பினும் தொடர்ந்து அவரால் கமர்ஷியல் படங்களை கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன். உள்ளடக்கம் சார்ந்த படங்களில் அவர் ஒட்டிக்கொள்ளட்டும். அதுவே அவரது அடுத்தடுத்த திரையுலக படைப்பிற்கு கைக்கொடுக்கும். ஒரு சில இயக்குனர்களால் மட்டுமே வணிகம் + உள்ளடக்கம் சார்ந்த படங்களை கச்சிதமாக கலக்க முடியும்.
துரதிர்ஷ்டவசமாக டி.ஜே.ஞானவேல் அவர்களில் ஒருவர் அல்ல. மொத்தத்தில் வேட்டையன் சமூகத்திற்கு ஒரு கண்ணாடியை காட்டுகிறார்.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top