Close
ஏப்ரல் 3, 2025 4:00 காலை

இசைஞானி இளையராஜா 49 ஆண்டுகளாகவே ஹீரோ தான்: நடிகர் சூரி

கதையின் நாயகனாக சூரி நடித்து, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படம், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைப் பெற்றதோடு, வசூலையும் அள்ளியது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும், முக்கியக் கேரக்டரில் வந்திருந்தார்.

இளையராஜா இசையமைத்த ‘விடுதலை’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே ஆரவார வரவேற்பைப் பெற்றது. ‘உன்னோட நடந்தா’ பாடலும், ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடலும் ரசிகர்களின் ‘தேன் கிண்ணம்’ என சொல்லலாம்.

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, விடுதலை இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியார், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதற்கும்  இளையராஜாவே இசை அமைத்துள்ளார்.

ஆர்.எஸ். இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘விடுதலை-2’ அடுத்த மாதம் திரை அரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் சூரியின் பேச்சுதான் ‘ஹைலைட்’. அவரது பேச்சு, பார்வையாளர்களுக்கு, ஒரு குதூகலமான அனுபவத்தை கொடுத்தது. ‘இந்த விழாவில் மட்டுமல்ல, கடந்த 49 ஆண்டுகளாக காதணி, திருமணம் என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும் தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார்’ என  சூரி தனது பேச்சை ஆரம்பித்த போதே, ஆரவாரம்  ஆரம்பமானது.

நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஏறாத இடம் இல்லை. பார்க்காத வேலை இல்லை. அந்த வேலைகளைப் பார்த்து விட்டு  கை, கால் வலியுடன் படுத்தால் எதிர்வீட்டு ஜன்னலில் லேசாக இளையராஜா பாடல் கேட்கும். அந்த வீட்டுக் கதவைத் தட்டி கொஞ்சம் கதவைத் திறந்து விடுங்கள் என்று சொன்னால், அவருடைய பாடல் தென்றல்போல வந்து தட்டி எழுப்பும் – ஒரு தாயைப் போல இருந்து அவருடைய பாடல் நம்மை ஆறுதல்படுத்தும்.

ஒரு முறை, பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரது ஸ்டூடியோவுக்கு போனேன் அங்கிருந்தவரிடம் எல்லோரும்  வந்து விட்டார்களா? என கேட்டேன். ‘யாரும் வரவில்லை இளையராஜா சார் மட்டும் தான் இருக்கிறார்’ என அவர் சொன்ன போது பதறிப்போனேன்.

காரை ஓரமாக விட்டு விட்டு காரிலேயே இருந்தேன்.  ஸ்டுடியோவுக்குள் சென்று, இளையராஜாவிடம் தனியாக பேசும் அளவுக்கு நான், ஆள் இல்லை – கொஞ்ச நேரம் கழித்து, விஜய் சேதுபதி, இளையராஜாவிடம் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது – அதன் பிறகே உள்ளே சென்றேன்.

அப்போது, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஆரம்ப கால விஷயங்களை அவர் வாயால் சொல்லிக் கேட்டது எனக்கு பொக்கிஷம், மிகப்பெரிய பெருமை. நான் மட்டுமில்லாமல் என் சந்ததிகள் கூட போற்றி பாதுகாக்க வேண்டிய பெருமை, அது என சூரி உணர்ச்சி வசப்பட்டபோது, ரசிகர்களும் மெய் மறந்தனர்.

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு ‘ஆப்ஷன்’ இருக்கும். ஆனால் ‘ஆப்ஷன்’ எதுவும் இல்லாத ஒரே ‘ஆப்ஷன்’ இளையராஜா மட்டும் தான். அவருக்கு மாற்று என்பதே கிடையாது’ என முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார் சூரி.

நன்றி:- பாப்பாங்குளம் பாரதி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top