விடுதலை முதல் பாகத்துல வாத்தியாரை கைது பன்றதோட முடிச்சிருப்பாங்க.
ரெண்டாவது பாகம் கைது பன்னவரை விசாரிக்க ஆரம்பிக்கிறதுல இருந்து பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி தொடங்குகிறது. வாத்தியார் எதனால் எப்போது போராளியா உருவெடுக்கிறார் என்ற ப்ளாஷ்பேக் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியும், அடிமைப்படுத்தியும் சர்வாதிகாரம் செய்து வரும் பண்ணை முதலாளிகளை எதிர்த்து அமைப்பாய் ஒன்று திரண்டு போராடும் வாத்தியார் ஒருகட்டத்தில் தன்னிகரற்ற மக்கள் தலைவனாக உருவெடுக்கும் போது இசைஞானியின் ‘பொறுத்தது போதும் பொங்கிஎழு’ என்ற வரிகளுடன் தீம் சாங்க் ஒன்று உடல்சிலிர்க்க ஒலிக்க படத்தின் முதல் பாதி முடிகிறது.
கருணாஸ் பையன் கென் கருணாஸ் முதல் ஒருமணி நேர ப்ளாஷ்பேக் காட்சியில் அசத்தியிருக்கிறார். தொடர்ந்து இடைவேளைக்கு பின் வாத்தியாரை போலிசார் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். நினைத்த இடத்திற்கு போய் சேர்ந்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை. கடைசி 5 நிமிடம் வசனமே இல்லாத சூரியின் நடிப்பு தான் க்ளைமேக்ஸ். கலக்கிட்டார்..
விஜய் சேதுபதி கிட்ட என்ன நல்லவிசயம்ன்னா சீரியசான காட்சில கூட காமெடியை சொருகிடலாம். எல்லா நடிகருக்கும் அது செட் ஆகுமா தெரில. இவருக்கு பக்காவா இருக்குது. கிட்டதட்ட விக்ரம் வேதா மூவில வேதா போலிஸ் கிட்ட மாட்டினதும் கதை சொல்வாரே அதே மாதிரி தான் விடுதலை2 படம் முழுக்க விஜய் சேதுபதி ரோல்.
ப்ளாஷ்பேக் சொல்றேன்னு நடந்த புரட்சிகள், போராட்டங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் ன்னு சுவாரஸ்யமா அவருக்கே உண்டான பாணியில் சொன்னது ரசிக்க வச்சது. போலிஸ் அதிகாரி சேத்தனுக்கும் , வாத்தியாருக்கும் நடக்குற உரையாடல் எல்லாம் பயங்கர காமெடியா இருக்கும். தியேட்டர் முழுக்க சிரிப்பலை தான்.
மஞ்சு வாரியர் கேரக்டர் மட்டும் மனசுல ஒட்டவே இல்லை. கொஞ்சம் செயற்கையா தெரிஞ்சது. வெற்றிமாறன் படத்துல தத்துவங்கள் எல்லாம் இயல்பா எதாவது ஒரு சீன்ல வச்சி கடத்துவார். பெண்கள் முடியை கட்டையா வெட்டுறது, சமையல் பெண்களுக்கானது மட்டுமா போன்ற கருத்துக்களை சொல்லும் ஒருசில காட்சிகள் படத்தில் வைக்கனும் என்றே வைத்தது போல தனித்து தெரிந்தது. அவசியமான கருத்துக்கள் என்பதால் அதையும் ஏற்றுக்கொள்ளலாம்.
அடர்ந்த காட்டுப்பயணம், துப்பாக்கிச்சண்டை, த்ரில்லிங், பைட்டிங் ன்னு இருக்குற ஆக்சன் மூவியை தலைவலி வராம பாக்க வச்ச பெருமை இசைஞானியை சேரும். படம் முழுக்க மியுசிக் ரொம்ப அருமையா இருந்தது. சும்மா வளவள ன்னு இல்லாம தேவையான இடத்துல, தேவையான அளவு இசையை கொடுத்து காட்சிக்கு உண்டான உணர்வை ரசிகர்களுக்கு கடத்துற வேலையை சிறப்பா செஞ்சிருக்கார்.
வெற்றிமாறன் படம் என்றாலே ஸ்கீரின்ல வர்ர ஒவ்வொரு ப்ரேமும் ஒரிஜினலா இருக்கும். ஒரு கிராமத்தை காமிச்சாலும் சரி, இருவருக்கிடையே நடக்குற உரையாடலை காமிச்சாலும் சரி அவரோட அனுபவம் திரைல தனியா தெரியும். கதையை எங்க ஆரம்பிச்சி எங்க முடிக்கனும் என்பதுலயும் அவரை அடிச்சிக்க முடியாது. படம் முழுக்க புரட்சிகர வசனங்களும், தத்துவங்களும் குவிந்து கிடக்கிறது.
தன்னலமற்ற தமிழ் போராளிகளின் தியாகங்களையும், எப்படியெல்லாம் உண்மைகள் மறைக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். விடுதலை பாகம்-2 அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய அற்புதமான படைப்பு.