தவறான தகவல்களை பரப்பி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று நடிகர் அல்லு அர்ஜுன் குமுறலாக வெளிப்படுத்தியுள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ம் தேதி ரிலீஸ் ஆனது. இதனையொட்டி சிறப்புக் காட்சிக்கு தெலங்கானா அரசு அனுமதி அளித்திருந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் அல்லது அர்ஜூன் சிறப்புக் காட்சிக்கு வரக்கூடாது என்று கேட்டுக் கொண்டதை மீறி அவர் சிறப்புக் காட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியில் வந்தார். அவரை தெலுங்கு திரையுலகத்தினர் அனைவரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதி யை அர்ஜுன் வழங்கி இருக்கிறார். ஆனாலும் விபத்து நடந்ததற்கு அவர்தான் முழுக்க காரணம் என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தெலங்கானா சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை மஜ்லிஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அக்பருதீன் ஒவைசை எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜூன் வரக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அதையும் மீறி அவர் சிறப்புக்காட்சிக்குச் சென்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.
அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜூனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்றவாறு அவர் கையசைத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு செய்த அல்லு அர்ஜூன் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்? என்று சரமாரியாக முதல்வர் விமர்சித்தார்.
இதில் அதிர்ச்சி அடைந்துள்ள அல்லு அர்ஜூன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
நடக்கக் கூடாத சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அது ஒரு விபத்து. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் உடல் நிலைமை குறித்து ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை நான் சிகிச்சைகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறேன்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இருப்பதை மருத்துவர்கள் கூறியுள்ளனர். என்னைப்பற்றி ஏராளமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தவறான குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு அரசியல்வாதியையோ அல்லது அதிகாரிகளையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனது நற்பெருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது என்று வருத்தமுடன் தெரிவித்தார்.