Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

கடைசி விவசாயி.. திரைப்படம் ஒரு பார்வை..

திரைவிமர்சனம்

கடைசி விவசாயி திரைப்படம்

கடைசி விவசாயி திரைப்படம் குறித்த ஆழமான அழுத்தமான விமர்சனம் தமிழ் சினிமா ரசிகர்களின்  பார்வைக்கு வைக்கிறோம்.

சில வாரங்களாக பார்க்க நினைத்து அண்மையில் தான் பார்க்க முடிந்தது. விவசாயத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இயக்குனர் மணிகண்டனின் இந்த படம், ஒரு ஆத்மார்த்தமான வயதான ஒரு விவசாயி, அவர் எந்தளவிற்கு விவசாயத்தை நேசிக்கிறார் என்பதை பற்றி பேசுகிறது.

கதையின் நாயகன் மாயாண்டி போன்ற மாமனிதர்கள் இந்தியா முழுவதும் விரவி கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் சமூக வாழ்வியல் சூழலால் விவசாயத்தை கடைசியாக முடித்துக்கொண்டாலும், கடைசி வரை விவசாயியாகவே வாழவேண்டும் என்கிற வைராக்கியத்துடன் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த படைப்பு அர்ப்பணம்.

கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் என்கிற பாடல் பின்னணியுடன் மயில், மலை, வயல், மரம் என இயற்கை காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. மயில், முருக கடவுள், மாயாண்டி என மூன்று பாத்திரங்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கிறது. நாம் கேட்டு பழகிய இரண்டு முருகன் பக்தி பாடல்கள் படத்திற்கு கூடுதல் ரசனையை கொண்டு வந்து நிறுத்துகிறது.

குலதெய்வக் கோயில் திருவிழாவை நடத்த, ஊர் வழக்கப்படி படையலுக்கு நெல்மணிகளை விளைவித்துத் தருமாறு மாயாண்டியிடம் அந்த ஊர் மக்கள் கேட்கின்றனர். அதை ஏற்று உழவு செய்கிறார், இதற்கிடையில் அவரது துண்டு நிலத்தை விலை பேசியவர்களுக்கு நிலம் கிடைக்கவில்லை என்பதால் அவரை சிக்கலில் மாட்டி வைக்க தருணம் பார்க்கிறார்கள். தன்னுயிர் போல் எல்லா ஜீவராசிகளின் நேசிக்கும் மாயாண்டியின் விளைநிலம் அருகே மூன்று மயில்கள் இறந்து கிடக்கின்றன.

இதைப்பார்த்து கசிந்துருகும் மாயாண்டி, இறந்துபோன மூன்று மயில்களையும் தனது நிலத்தில் புதைத்து விடுகிறார். இதை அறிந்த ஒரு நபர், மாயாண்டி தான் மயில்களைக் கொன்று புதைத்ததாக புகார் அளிக்க, போலீஸ் வழக்குப் பதிவு செய்து மாயாண்டியை சிறையில் அடைக்கிறது. மாயாண்டி சிறை வாசத்திலிருந்து மீண்டாரா? கோவில் திருவிழா நடந்ததா? அவர் விதைத்த பயிர்களுக்கு என்ன ஆகின என்பது கதை.
வழக்கு விசாரணையின் போது நீதிபதி முன் பேசும் மாயாண்டியின் வெகுளித்தனமாக பேச்சும், சிறைவாசத்தில் சக கைதியுடன் விவசாயம் குறித்த உரையாடலும், தன் மகனான விஜய் சேதுபதிக்கு சோறு பரிமாறும் போது காட்டும் வாஞ்சையும் நம் நெஞ்சை கொள்ளை கொள்கின்றன.

அரிதாரம் பூசாமல் இயல்பாக எல்லா பாத்திரங்களும் வந்து போகின்றன. தான் வாழும் மண் மீதும், தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் மீதும் பேரன்பு வைத்திருப்பவர்கள் அவர்கள். மாயாண்டியின் மீது அவரது வயதை ஒத்தவர்கள், அவரை விட இளையவர்கள் என அந்த கிராமத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் அனைவருமாக, அவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்கள். அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்கிற போது எப்படி துடித்திருப்பார்கள் – நமக்கும் அந்த துடிப்பு இருக்க தான் செய்கிறது.

பழுப்பேறிய பற்கள்.. இரண்டு கைகளிலும் கணக்கிலடங்கா சிவப்புக் கயிறுகள், துணிப்பைகள், கைக்கடிகாரங்கள், நெற்றி நிறைய விபூதி.. என அரை மன நோயாளியாக, முருகபக்தராக வருகிறார் விஜய் சேதுபதி. கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

மாயாண்டி தவிர்த்து படத்தில் இரண்டு பாத்திரங்கள் என்னை கவர்ந்தது. ஒன்று பெண் நீதிபதி. கறாராக சட்டவிதிமுறை களை பேசுவதிலும், பெரியவர் இந்த தப்பு செய்திருக்க மாட்டார் என திட்டவட்டமாக உணர்வதும், அதையொட்டி விடுதலை செய்வதில் காட்டுகிற முனைப்பும் அருமை. இன்னொரு பாத்திரம், பெரியவருடன் காவல் நிலையம், நீதிமன்றம் என கூடவே பயணித்து, அவர் விடுதலை ஆக வேண்டும் என பழனி முருகன் கோயிலுக்கு சென்று வேண்டி கொள்கிற கிராமத்து இளைஞன். இருவரும் வெகு இயல்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். தெரிந்த சினிமா முகங்களின் தேவை இந்த திரைப்படத்திற்கு அவசிமற்றதாகிவிடுகிறது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் நம் வாழ்க்கையில் எப்படி எல்லாம் நுழைந்திருக்கிறது என்பதையும், ரசாயன உரங்களின் தாக்குதல் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமாக எளிய வசனம் மற்றும் வலிய காட்சி மூலம் சொல்லி, விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

சோகமான முடிவுகளே படைப்பின் வீரியத்தை கூட்டிக் காட்டும் என்கிற பொது சூத்திரத்தை உடைத்தெறிந்திருக் கிறார் இயக்குனர். தேடி தேடிப் பார்த்தாலும் படத்தில் குறையென குறைப்பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை. ஒரு கிராமத்துக்குள் நுழைந்து, வெள்ளந்தி மக்களை நேரில் சந்தித்து விட்டு வந்த நிறைவான உணர்வை தருகிறது கடைசி விவசாயி.

விமர்சகர்-  சங்கர், இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top