திருவொற்றியூரில் வெளியூருக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த சரக்குப் பெட்டகத்தின் சீலை உடைத்து செப்புத் தகடுகளை (தாமிரம்) திருடிய 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரவன்குமார் (28). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாதவரத்தில் குடியேறிய ஸ்ரவன்குமார் வடமாநிலங்களுக்கு தாமிரம், பித்தளை பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஆகஸ்டு 8-ம் தேதியன்று புதுதில்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுமார் 28 டன் தாமிரத்தை சரக்குப் பெட்டகம் ஒன்றில் அடைத்து சீல் வைத்து சரக்கு ரயில் மூலம் தில்லி கொண்டு செல்வதற்காக திருவொற்றியூர் கான்கார் ரயில்வே யார்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மறுநாள் இறக்கி வைக்கப்பட்ட சரக்குப் பெட்டகத்தை ஸ்ரவன்குமார் சென்று பார்த்தபோது பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 8 டன் எடையுள்ள தாமிரத் தகடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 35 லட்சம் ஆகும்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரவன்குமார் தாமிரத் தகடுகள் திருடு போனது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தொடர் விசாரணை நடத்திய போலீஸார் ரவி (42). இமாம் பாபு (56). அணில்குமார் (35), நாராயணகுமார் (40), கிரிசன் (40 ) ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 6 டன் எடையுள்ள தாமிரத் தகடுகள், ரூ. 8 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இளவரசன் என்பவர் தலைமறைவாக உள்ளார்.
சரக்குப் பெட்டகத்தில் ஏற்றி அனுப்பப்பட்ட தாமிரத் தகடுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி போடாமல் பில் தயார் செய்து ஸ்ரவன்குமார் அனுப்பியுள்ளதாகவும், இதனை அறிந்து கொண்ட ஸ்ரவன்குமாரிடம் வேலை செய்து வந்த ரவி கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையடித் துள்ளார்.
ஜி.எஸ்.டி, வரி போடாததால் திருடினாலும் யாரிடமும் புகார் கூற ஸ்ரவனகுமாரால் முடியாது என நம்பிய ரவி திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி போலீஸார் ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த ஜி.எஸ்.டி. அதிகாரி தாமரைமணாளன் புகாரில் துரிதமாகச் செயல்பட்டு கொள்ளையர் களைக் கைது செய்த சிறப்புப் படை சார்பு ஆய்வாளர் வானமாமலை மற்றும் போலீஸாரை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் முகமது நாசர் பாராட்டினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்யப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.