பெருந்துறையில் காய்கறி மார்க்கெட்டில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதி சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா (57). இவர்களுக்கு வெங்கடேஷ் , கார்த்திக் என இரண்டு மகன்களும், மீனா, வனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜா கடந்த 6 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். மூத்த மகன் வெங்கடேஷ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்கேயோ சென்று விட்டார். இதையடுத்து சாந்தா தனது 2-வது மகன் கார்த்திவுடன் வசித்து வந்தார்.
சாந்தாவும், கார்த்திக்கும் கட்டிடவேலைக்கு சென்று வந்தனர். பின்னர் கார்த்திக் பெருந்துறையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். சாந்தாவும், கார்த்திக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சாந்தாவும் கார்த்திக்கும் இரவில் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதிகளில் தங்குவது வழக்கம். இரவில் மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கி விடுவார்கள்.
சாந்தா அவ்வப்போது கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள இளைய மகள் வனிதா வீட்டிற்கு சென்று வருவார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு சாந்தா குடிபோதை யில் வனிதா வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 7 மணி அளவில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வதாக சாந்தா கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் இரவு 11 மணி அளவில் கார்த்திக் தனது தங்கை வனிதா வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு வனிதா அவரது கணவர் வேலன் கதவை திறந்து வெளியே வந்து கார்த்திக்கிடம் எதற்காக பதற்றமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு கார்த்திக் இரவு 10.30 மணி அளவில் அம்மாவுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு அம்மா படுத்து தூங்கும் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று பார்த்தபோது அம்மாவை காணவில்லை என்றும் சந்தையின் மேற்புறம் பகுதியில் சென்று பார்த்தபோது அம்மா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடப்பதாக கூறினார்.
இதனை அடுத்து வனிதா தனது கணவர் மற்றும் உறவினர்க ளுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். காய்கறி சந்தை மேற்பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் சாந்தா இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.