சென்னை மணலியில் ரூ. 35 மதிப்புள்ள இரும்புத் தகடுகளை கடத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து 29 டன் எடையுள்ள இரும்புத் தகடுகளை ஏற்றிய லாரி ஒன்று கடந்த ஜூலை 16-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த நாள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய இரும்புத் தகடுகள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவில்லை. இதனையடுத்து லாரியைத் தேடும் பணி நடைபெற்றது.
செல்வம் என்ற டிரைவர் ஓட்டி வந்த லாரி இரும்புத் தகடுகள் இல்லாத நிலையில் ஆண்டார் குப்பம் அருகே மீட்கப்பட்டுள் ளது. இது குறித்து தனியார் நிறுவனம் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த மணலி காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில் இரும்புத் தகடுகளைக் கடத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்த பிச்சாண்டி (37), சந்தோஷ் (34), சுரேஷ்குமார் (36) , பாரதிராஜா (43) ஆகிய நான்கு பேரையும் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 29 டன் எடையுள்ள இரும்புத் தகடுகளையும் மீட்டு நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.