Close
நவம்பர் 22, 2024 12:33 மணி

திருச்சியில் ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு தனி அலுவலகம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறப்பு

தி்ருச்சிராப்பள்ளி

ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு தனி அலுவலகத்தை திருச்சியில் திறந்து வைத்தார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சியில் ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு தனி அலுவலகத்தை   பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

ஆசிரியர்களுடன் அன்பில் என்னும் நிகழ்வின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நேரடியாக ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடத் தொடங்கியிருக்கும்பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் முழுச் சுதந்திரத்தோடு கற்பித்தல் பணியில் ஈடுபட்டால் மட்டுமே, மாணவர்களது கற்றல் சிறக்கும் எனச் சொல்லி, கடந்த மாதம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்வில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டமான ஆசிரியர் மனசுத் திட்டம், அறிவிக்கப் பட்டு செயல்படத் தொடங்கியது.

அதனது தொடர்ச்சியாக அமைச்சரது இல்லத்திலும்,அலுவல கத்திலும் ஆசிரியர் மனசுப் பெட்டி வைக்கப்பட்டு,  அமைச்சரைச் சந்திப்பதற்காக வரும் ஆசிரியர்கள் காத்திருக்கக்கூடாது என்கிற வகையில் ஆசிரியர் மனசுப் பெட்டியும்,ஆசிரியர்கள் தேடிவந்துதான் கோரிக்கைகளை சொல்ல வேண்டும் என்பதாக இல்லாமல், மின்னஞ்சல் வழியாகவும் சொல்லலாம் என அறிவித்து,
aasiriyarmanasu@gmail.com , aasiriyarkaludananbil@gmail.com எனத் தனியே இரு மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டு அதன்மூலம் ஆசிரியர்களது கோரிக்கைகளைப் பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான தனி அலுவலகம் ஒன்றை அமைத்து,தனது நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் வகையில் ஆசிரியர் மனசு அலுவலகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.தான் அறிவித்தபடி ஆசிரியர் மனசு அலுவலகத்தைதிருச்சியில் செயல்படும் ஆசிரியர் இல்லத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

அங்கு ஆசிரியர் மனசுப் பெட்டியில் உள்ள கோரிக்கை மனுக்களைப் பார்வையிட்டதுடன்,ஆசிரியர் மனசுப் பிரிவிற்கு வந்துள்ள மின்னஞ்சல்களையும் பார்வையிட்டு ,ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமாரிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தொலைபேசி வாயிலாக நேரடியாகப் தானே பேசி அவர்களது கோரிக்கைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றமைக்கு பெரம்பலூரில் நடைபெற்ற ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்வில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாராட்டி மகிழ்ந்த தருணம்

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் ஆசிரியர்கள் தமது குறைகளை நேரடியாக தங்கள் துறை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்து,அதற்கு தீர்வு காண வழி ஏற்படுத்தி, அதற்கென தனி அலுவலகம் திறந்திருப்பது என்பது பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

ஆசிரியர் மனசுஅலுவலகத்திற்கு வரும் மின்னஞ்சல்களை உடனடியாகப் பரிசீலித்து, தனது கவனத்திற்கு கொண்டு வரவும்அலுவலகப் பணியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி அமைச்சருடன் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி,மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன், விரிவுரையாளர் ராஜ்குமார், அலுவலகத் தொடர்பாளர் கணேசன், ஆசிரியர் இல்ல மேலாளர் கண்ணன், கணினி உதவியாளர் வினு ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்விற்கான மொத்த ஏற்பாடுகளையும் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் செய்திருந்தார்.

ஆசிரியர்களின் பதிவில் சில துளிகள்..

சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை அரிஸ்டா’ஆசிரியர் மனசு’ க்கு ஜீவனை தந்து
புது நம்பிக்கையை விதைத்த மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல.

ஓர் அமைச்சரை பார்க்க பலமுறை படையெடுத்தாலும் அவரின் அரியணையைக் கூட பார்க்க முடியாமல் திரும்பிய காலம் மாறி. எதிர்பாராத நேரத்தில் அமைச்சரே அலை பேசியில் அழைத்து, என் கோரிக்கை முழுவதையும் கேட்டு, நிச்சயம் இக்கோரிக்கையை நிவர்த்தி செய்கிறேன் என்று புது நம்பிக்கையை வார்த்த, எம் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சருக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இந்த அழைப்பு இழந்த எனது நம்பிக்கைக்கு மட்டும்
ஜீவனைத் தரவில்லை.’ஆசிரியர் மனசு’ என்னும் திட்டத்தின் மீது இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளார் அமைச்சர் எனக் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top