ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியலை அறிந்திருக்க வேண்டும் என்றார் மதுரை தியாகராஜர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.ராஜாகோவிந்தசாமி.
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட் துவக்க விழாவுக்கு வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் பி.கருப்பையா தலைமை வகித்தார்.
மதுரை தியாகராஜர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.ராஜாகோவிந்தசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கி பேசுகையில், மாணவ, மாணவிகள் கற்றல் என்பது சுயமாக கற்றல், ஆசிரியர் மூலம் கற்றல், கலந்துரையாடல் மூலம் கற்றல் என்ற மூன்று வகையாக இருக்குமானால் அது சிறப்பாக அமையும்.
இன்றைய கற்றலே நாளைய பிரதிபலிப்பாகும். பல்துறை வல்லுநர்களை உருவாக்கும் ஆசிரியரானவர் தான் பட்டம் பெற்றவுடன் கற்றலை நிறுத்தி விட்டால் அறிவை இழந்து விடுகிறார். எனவே ஆசிரியரானவர் தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு தாமதமாகத்தான் இருக்கும். வகுப்பறை என்பது மாணவர் களுக்கு வகுப்பு மட்டுமல்ல. அது மாணவர்களுக்கு கொடுக் கப்படும் வாய்ப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல் அறிந்திருக்க வேண்டும்.
உற்றுநோக்கல், வாசித்தல், சிந்தித்தல் ஆகிய மூன்றும் ஒரு ஆசிரியருக்கு மிகவும் அவசியமாகும். எனவே சிறந்த ஆசிரியர் என்பவர் நிதானமாகவும் தெளிவாகவும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். கூறுதல், காண்பித்தல், செயல்படுத்துதல் ஆகிய மூன்றும் ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் பொருளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன், வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜீவானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், துணைத்தலைவர் அழகர்சாமி செயலாளர் பெத்தையன், பொருளாளர் மணிமேகலை வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை உதவிப்பேராசிரியை ஏ.அமுதா தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் எம்.திருவள்ளுவன்நன்றி கூறினார்.