Close
நவம்பர் 21, 2024 7:09 மணி

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் தமிழினி துணைவன்..

புதுக்கோட்டை

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் தமிழினி துணைவன்

அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவம் பயில செல்லும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஆம் ஆண்டாக வழிகாட்ட தயாராக இருக்கிறது  தமிழினி துணைவன்  குழு.

தமிழினி புலனம் என்ற வாட்ஸ்அப் குழு 2019-ஆம் ஆண்டு தமிழ் மொழி ஆர்வம் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மற்ற துறையினருடன் இணைந்து உருவாக்கப்பட்டு தினமும் பல்சுவை போட்டிகளின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறது.

இந்த மருத்துவ குழுவினர் 2022  -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “தமிழினி துணைவன்” என்ற அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருபவர்களுக்கு மருத்துவ பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வாரம்தோறும் இணையவழியில் தமிழில் வகுப்புகளை நடத்தி துணையாக இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழினி துணைவன் நிறுவனரும் அரசு மருத்துவருமான டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி கூறியதாவது:

புதுக்கோட்டை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள தமிழினி புலன குழுவை சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள்,மூத்த மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் ஒன்றிணைந்து தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து 7.5 இட ஒதுக்கீட்டில் தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவ மாணவிக ளுக்கு மருத்துவ கல்வியை சிரமமின்றி அவர்கள் படிப்பதற்கு கட்டணம் இல்லாமல் ” தமிழினி துணைவன் “என்ற வாட்ஸ்அப் குழு என்னால்  உருவாக்கப்பட்டது.

தமிழகம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகளுக்கு திங்கள், செவ்வாய் ,புதன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அவர்களுக்கு முதலாமாண்டு மருத்துவ பாடத்தின் கருப்பொருளை பேராசிரியர்கள் ,மூத்த மருத்துவர்கள் கொண்டு தொடர்ந்து வகுப்புகள் நடத்தி வருகிறோம்.

இதுவரை முதலாம் ஆண்டு மருத்துவ பாடங்களான உடற்கூறு இயல், உடலியங்கியல் மற்றும் உயிர் வேதியியல் உள்ளிட்டவை இணையவழியில் 107 வகுப்புகள் தமிழில் விளக்கிக் கூறி தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாரமொரு பிரபல மருத்துவ நிபுணர் கலந்து கொள்ளும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வகுப்பு, மாதம் ஒருமுறை மனநல ஆலோசனை வகுப்பு என மருத்துவ மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிமையாக்கும் விதமாகவும் முக்கியமான வினாக்களுக்கான விடைகளை மாணவர்களுக்கு எழுதிக் காட்டியும் படம் வரைந்து விளக்கிக்கூறியும் மருத்துவ பேராசிரியர்கள் சரயு, மகேஸ்வரி, நிர்மலா, திருமாறன், நவீன் பிரபாகரன், அஷ்ரப் அலி, தமயந்தி, சௌந்தர்யா,மேரி அருள் பிரியா, வினுபிரதா, ராஜ் கோகிலா ஆகியோர் எளிமையாக்கி வருகின்றார்கள்.

பிரத்தியேகமாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதிலும் மாணவ மாணவிகளுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் தமிழினி துணைவன் வாட்ஸ் அப் குழுவில் உள்ளனர்.

சிறப்பாக பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக அளவில் மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு தங்க பதக்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை அடுத்து, இந்த வருடம் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 2022 -2023 கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் 491 மாணவ மாணவிகளுக்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனி கிழமைகளில் மாலை 6 முதல் 7 மணி வரை வகுப்புகள் நடைபெற உள்ளது.

எதிர்வரும் (நவ) 17 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை.தமிழினி துணைவன் குழுவில் இணைய டாக்டர். வீ.சி.சுபாஷ் காந்தி- 98949 80802 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதற்கான திட்டமிடல் பணிகளை பேராசிரியர் திருவேங்கடம் மற்றும் செவிலிய பேராசிரியர் உமா ஒருங்கிணைத்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top