Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

சோழவந்தான் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..

மதுரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

சோழவந்தானில் 94-ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியான, ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர் குழுவாக இணைந்து தாங்கள் பயின்ற பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஸ்மார்ட் கிளாஸ் துவங்கும் விருப்பத்துடனும் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் நிதி வழங்கினார்கள்.

மாணவ , மாணவியர்கள் தாங்கள் குடும்பத்துடன் வந்து தாங்கள் பயின்றபோது இருந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தும், தற்போது உள்ள ஆசிரியர்களுக்கும் மரியாதை செய்து நிதியை வழங்கினர்.மாறிவரும் கால சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் தாங்கள் அளித்துள்ள நிதியை கொண்டு ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

நிதியை, தாளாளர் பால் பிரிட்டோவிடம் கூட்டாக வழங்கினர். தொடர்ந்து , தாங்கள் பயின்ற பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த உதவிகள் செய்ய இருப்பதாக கூறினர். பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜெயராணி ,உதவி தலைமை ஆசிரியர் இருதயராஜ் மற்றும் முன்னாள் இந்நாள் ஆசிரிய ஆசிரியர் பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பள்ளி தாளாளர் ஜான் பிரிட்டோ கூறும் போது: இன்று நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மலரும் நினைவுகளை உருவாக்கியது. மேலும், அவர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பாடமாக அமையும்.இதுபோன்று அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதில், கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியை பேசும்போது:தாங்கள் வேலை பார்த்த காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவரிடம் எந்தவித பாகுபாடு இன்றி பழகியது, மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டது போன்றவர்களை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும், 30 வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் ஒருங்கிணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுவது மாதம் ஒருமுறை எங்களைப் போன்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சுற்றுலா மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற நற்பணிகளில் ஈடுபடுவதால் எங்களின் மன அழுத்தம் குறைகிறது என்று கூறினார்.

பழைய மாணவர் அல்லது முன்னாள் மாணவர் (Alumnus, Alumni) என்பவர், முன்னாட்களில் பயின்ற கல்லூரி மாணவர்களை யும், முன்னாட்களில் பயின்ற பள்ளி மாணவர்களையும் குறிக்கும். பல மாணவர்கள் கல்லூரி முடிந்த பின்பும் தொடர்பில் இருப்பர். பலர் அமைப்பு நோக்கிலும் செயல்படுகின்றனர்.

தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரிகளில் முன்னாள் மாணவர் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது.  இவ்வமைப்புகள் தம்முடைய முன்னாள் மாணவர்களையும் இந்நாள் மாணவர்களையும் இணைக்கும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ இவ்வமைப்புகளின் கூட்டம் கூட்டப்பெற்று, அந்த ஆண்டில் நடைபெற்ற பணிகள், அடுத்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top