Close
நவம்பர் 22, 2024 10:12 காலை

மாணவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

சென்னை

திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற வர்ஷினி என்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழை வழங்கிய கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன்

போட்டிகளை சமாளிக்க மாணவர்கள் திறன் பெற்றவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அரசு முதன்மை செயலர்  டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன்.

அனைத்து துறைகளிலும் போட்டிகள் அதிகரித்து வரும் இக்காலத்தில் மாணவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள திறன் பெற்றவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன்   தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா மேல்நிலைப் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா மற்றும் ‘ஆழ்வார்களும் அருந்தமிழும்’ என்ற தலைப்பிலான மாணவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜே. ரங்கநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளியில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

அப்போது ஜெ. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தொழிலாளர்கள் நிறைந்த வடசென்னை பகுதியில் இது போன்ற கட்டமைப்பு நிறைந்த பள்ளி செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. கல்வியில் சிறப்பிடம் பெற்றதன் மூலமாகத் தான் தமிழகம் இன்றைக்கு முன்னோடி மாநிலமாக வளர்ந்துள்ளது. தற்போதைய காலகட்டம் என்பது அனைத்து துறைகளிலும் போட்டிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தாங்கள் விரும்பும் வெற்றியைப் பெற்றிட கடுமையாக உழைக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அது குறித்த தகவல்களை திரட்டி விடாமுயற்சியுடன் முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும்.

தேர்வுகளில் என்ன மதிப்பெண்கள் பெற்றாலும் அதனையே ஒரு மைல்கல்லாக ஏற்றுக்கொண்டு அடுத்த மைல்கல்லை நிர்ணயித்துக் கொண்டு முயற்சிகளை தொடர வேண்டும். திறன் வளரும்போது தாழ்வு மனப்பான்மை நீங்கி தனக்குள்ளே ஒரு வித தன்னம்பிக்கை ஏற்படும். தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. இளம் வயதில் பல்வேறு தோல்விகளை சந்தித்தவர்கள் தான் பிற்காலத்தில் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்.

உலகில் பாதுகாப்பான ஜனநாயகம் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. எதிர்காலத்தில் நிறைய வாய்ப்புகள் நமது இளைஞர்களுக்கு கிட்ட உள்ள நிலையில் திறன்களை வளர்த்துக் கொள்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் எதிர்காலம் மாணவர்களின் கைகளில் தான் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.

நல்ல பள்ளி அமைவது காலத்தின் கொடை:

நிகழ்ச்சியில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி பேசியதாவது:  பள்ளிகளில் வரலாறு, கலாச்சாரம் குறித்த நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நல்லதொரு பள்ளி, நல்ல ஆசிரியர்கள் ஒரு மாணவனுக்கு அமைவது என்பது காலத்தின் கொடையாகும்.

வகுப்பறையில் கற்றுக் கொண்டவைகளை மாணவ பருவத்திற்கு பிறகு வெளியில் தாங்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது திறன்களை வளர்த்தெடுக்க முடியும். ஆழ்வார்களும் அருந்தமிழும் என்ற நிகழ்ச்சி மூலம் ஆழ்வார்கள் தமிழுக்கு, தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி குறித்து இளம் தலைமுறையினர் நன்கு அறிந்து கொள்ள வழி வகுத்துள்ளது என்றார் குப்புசாமி

இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர் ஜி.வரதராஜன், தொழிற்சங்கத் தலைவர் என்.துரைராஜ், பள்ளி நிர்வாகிகள் ஹரிஹரன், அவந்திகா, பள்ளி முதல்வர் மலர்விழி, பள்ளியின் ஆலோசகர் சந்திரகலா, அரிமா சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், செல்வம் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top