Close
நவம்பர் 22, 2024 10:08 காலை

புதுகை நகராட்சி பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழா

அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, அண்ணா பிறந்த நாளான செப் 15 -2022 -ல்   மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

இத்திட்டத்தின்படி தினமும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைவர். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசு செலவு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை படிப்படியாக விரிவுபடுத்தி, முழுமையாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான இன்று(மார்ச்.1) புதுக்கோட்டை நகராட்சியில் 11 பள்ளிகளில் 1377 மாணவ,மாணவியர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது:

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் 1377 மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு திட்ட தொடக்க விழா சாந்தநாதபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி பேசியதாவது: ஜனவரி 13 -இல் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ,மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளிகளில் விரிவுபடுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட கோவில்பட்டி, சந்தைப்பேட்டை, போஸ்நகர், மாலையீடு, மச்சுவாடி, சாந்தநாதபுரம், பிள்ளை தண்ணீர் பந்தல், சமத்துவபுரம், தைலாநகர், அசோக்நகர், அன்னச்சத்திரம் ஆகிய 11 பள்ளிகளில் உள்ள 1137 மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் காலை சிற்றுண்டி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட 11 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 1 -ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்வில் நகராட்சித் தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் எம். லியாகத் அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டாச்சியர் விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் செங்குட்டுவன், அருள்,பிரியா, பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து , இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப் பாளர் முனியசாமி,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தகொடி வரவேற்றார். நகராட்சி அலுவலர் குமாரவேல் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top