வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கான “நீங்கள் தான் முதல் ஆசிரியர்” ஆலோசனைக்கூட்டம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்டடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. “நீங்கள் தான் முதல் ஆசிரியர்”என்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை குறிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.
அரசுப் பொதுத்தேர்வுகள் நெருங்கி விட்ட காலத்தில் கல்விதொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக கல்வியாளர் சிகரம் சதீஷ்குமார் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கிட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சி.ஆர்.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
மருத்துவர் சி.ஆர். ஜோதி பேசும் போது, தேர்வு நெருங்கி விட்ட படியால்; மாணவர்கள் புதிய உணவுப் பதார்த்தங்களை உண்ணக்கூடாது. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் தேர்வை எதிர்கொள்ளளும் உடல் ஆரோக்கியம் அமையும் என்று மாணவர்களுக்கு ஆரோக்கிய அறிவுரைகள் வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மாணவர்களை தேர்வுக்கு தயாராகும் மனநிலையை பெற்றொர்கள்தான் உருவாக்கித் தரவேண்டும். மற்ற மாணவர்களே ஒப்பீடு செய்து பேசக்கூடாது.
தேர்வு நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மாணவர்களை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். தேர்வை எதிர்கொள்ளும் தயக்கத்தை உடைத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்று பேசினார்.
நிறைவாக கல்வியாளர் சிகரம் சதீஷ் பேசும்போது, நான் நிறைய மாணவர்களிடம் பேசிப்பார்த்த போது அவர்களின் குறை என்னவெனில் மாணவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதில்லை. பிள்ளைகளோடு அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
பிள்ளைகளின் வெற்றியை பெற்றோர்களே உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார். நிறைவாக பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார்.
விழாவினை ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி, தமிழாசிரியர் கனியன் செல்வராஜ், உளவியல் ஆலோசகர் மார்ட்டின் ஆசிர்வாதம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்
பெற்றனர். நிகழ்வினை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.