Close
நவம்பர் 22, 2024 12:11 மணி

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதனரெட்டி

பள்ளிச்செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009-ன்படி 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்து 8 – ஆம் வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பயில்வதை கண்காணித்து அடிப்படை கல்வியை முடிக்க செய்வது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் தலையாயக் கடமையாகும்.

சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரைக் கல்வி வட்டத்திற்குள் கொண்டு வர முறையான வாய்ப்பு ஏற்படுத்தி தருவதும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் முக்கியமான பணியாகும்.

மேலும், பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல், பள்ளிகளில் சேர்த்தல், சிறப்பு பயிற்சி மையங்கள் துவங்குதல், பயிற்சி முடித்து மீளப்பள்ளிகளில் சேர்த்தல், தொடக்கக்கல்வி முடிக்கும் வரை கண்காணித்தல் ஆகியவை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் பணிகளாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் பிற்காலத்தில் குழந்தைத் தொழிலர்ளர்களாக உருவாகும் நிகழ்வினை தடுக்கும் பொருட்டு,  சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரா.ராஜ்குமார் தலைமையில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நாகேந்திரன், காவல் துறை ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜயா,

கல்வித்துறை,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சாந்தி, ஐ.ஆர்,சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஜீவானந்தம், மனிதம் அறக்கட்டளை இயக்குநர் வனராஜன் மற்றும் சைல்டுலைன் (1098) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதி ஆகியோர் அடங்கிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் 11 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டனர்.

அதில், பள்ளி செல்லா இடைநின்ற 52 மாணவ,மாணவிகளை அவர்கள் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்  ப.மதுசூதன் ரெட்டி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top