புதுக்கோட்டை, கட்டியாவயல் மற்றும் எல்லைப்பட்டி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சார்பில் கட்டியாவயல் அருகே உள்ள சுப்பிரமணியம் வள்ளியம்மை திருமண மஹாலில் முப்பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் சிறப்பாக நடித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடிக்க காரணமாக இருந்த மாணவர்களுக்கும் ,இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுத்த தன்னார்வலர்களுக்கும், விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள்,பதக்கங்கள்,கேடயங்களை வழங்கினார்கள்.
முன்னதாக, இல்லம் தேடி கல்வி மைய புதுக்கோட்டை மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமிக்கு தன்னார்வலர்கள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.
விழாவிற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவிற்கு கட்டியாவயல் மைய இல்லம் தேடி கல்வி மைய மாணவர்களின் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நடனம் ,காண்போரின் கண்களுக்கு விருந்தாக இருந்தது.. அதே போல் கட்டியாவயல் மற்றும் எல்லைப்பட்டி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் கண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.சுதந்திரன்,ஒன்றிய கவுன்சிலர் ரெ.சிவயோகமலர் ,பஞ்சாயத்து தலைவர் ஏவிஎம்.க.பாபு, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மணவாளன், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை தமிழரசி, புதுக்கோட்டை ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் வீரமணி, எல்லைப்பட்டி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் செல்வக்குமார், இளையராஜா, மணிகண்டன் , கட்டியாவயல் மற்றும் எல்லைப்பட்டி ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, கட்டியாவயல் தன்னார்வலர் முனைவர் வினோதா, மீனாட்சி மற்றும் எல்லைப்பட்டி தன்னார்வலர் ஆதி திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்..