Close
நவம்பர் 22, 2024 11:58 காலை

எண்ணும் எழுத்து பயிற்சியை உயிரோட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும்

திருவில்லிபுத்தூர்

எண்ணும் எழுத்தும் ஒன்றிய அளவிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சியின் தொடக்க விழா கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்கள் அதனை வகுப்பறையில் உயிரோட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கு.வெள்ளத்துரை.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் எண்ணும் எழுத்தும் ஒன்றிய அளவிலான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சியின் தொடக்க விழா கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கு.வெள்ளத்துரை பேசியதாவது;அனைத்து குழந்தைகளும் அடிப்படை திறன்களை பெற வேண்டும் என்பது நமது இலக்கு ஆகும்.

ஆனால் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட 19 மாத கற்றல் இடைவெளியானது குழந்தைகள் அடிப்படை மொழித் திறன்கள் பெறுவதில் சவாலாக இருந்ததோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் அவரவர் வகுப்புத் திறன்களைப் பெற முடியாத சூழலுக்கும் காரணமாக இருந்தது.

எனவே அடிப்படை மொழித் திறன்களை குழந்தைகள் பெறுவதற்கு புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. அதனடிப்படையில் 2022-2023 கல்வி ஆண்டில் 1 முதல் 3 வகுப்பு குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் முன்னெடுக்கப் பட்டது.இத்திட்டத்தில், தமிழ்,ஆங்கிலம், கணக்கு பாடங்க ளுக்குள் சூழ்நிலையியல் கருத்துகள் ஒருங்கிணைக்கப்பட்டு குழந்தைகளின் கற்றல் நிலை அடிப்படையிலான கற்பித்தல் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் படி 2025 -இல் எட்டு வயதுக் குழந்தைகள் அனைவரும் பொருள் புரிந்து படிக்கவும், அடிப்படை கணக்குகளை செய்யவும் திறன் பெற வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 1 முதல் 3 வகுப்புக் குழந்தைகளை ஒருங்கிணைத்து கற்பிக்க முடிகிறது .குழந்தைகளை மையப்படுத்தியே கற்பித்தல் செயல்பாடுகள் உள்ளது.

மேலும் இத்திட்டமானது குழந்தைகளை ஈடுபாட்டுடன் கற்பவர்களாகவும், ஆசிரியர்களை வழிநடத்து பவர் களாகவும், பெற்றோர்களை வகுப்பறையை பாராட்டுபவர் களாகவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் பருவத்தில் அடிப்படைத் திறன்கள் கற்பித்தல் செயல்பாடுகளும், இரண்டாம் பருவத்தில் அடிப்படை திறன்களை வலுவூட்டல் செயல்பாடுகளும், மூன்றாம் பருவத்தில் கற்ற அடிப்படைத் திறன்களை நிலை நிறுத்தல் செயல்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

எண்ணும் எழுத்தும் திட்டம் 2022-2023 ஒரு வருட காலம் முன்னெடுக்கப்பட்டதில் குறிப்பிடத் தக்க சிறப்பான திறனடைவை பெற்றிருக்கிறோம். ஆயினும் அடிப்படை மொழித் திறன்களில் திறன் அடைவு பெற்ற குழந்தைகளை வகுப்பு நிலைக்குரிய திறனடைவை நோக்கி அழைத்துச் செல்ல கூடுதல் காலமும், மேம்படுத்தப்பட்ட புதிய அணுகுமுறையும் தேவைப்படுகிறது.

எண்ணும் எழுத்தும் திட்டம் 2023-2024 கல்வி ஆண்டிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு வந்துள்ள தொடக்க நிலை ஆசிரியர்கள் பயிற்சியில் பெற்ற கருத்துகளை வகுப்பறையில் உயிரோட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

பயிற்சியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நடராஜன் கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினார்.

பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் அழகப்பன் வரவேற்றுப் பேசினார்..

பயிற்சியின் பார்வையாளர்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் சீனிவாசன், செல்வலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் கோகிலா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top