Close
நவம்பர் 21, 2024 11:56 மணி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே 8 -ஆம் தேதி வெளியாகிறது

புதுக்கோட்டை

மே 8 -ல் வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் நடந்து முடிந்த  பிளஸ் 2  வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8 -ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 -ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியிடும்  தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ; dge2.tn.nic.in ; dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 2022-23 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 13 -ல் தொடங்கி ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 819 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 45 மாணவர்கள், கலை பாடப்பிரிவில் 14 ஆயிரத்து 162 மாணவர்கள், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 46 ஆயிரத்து 277 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதினர்

பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளில் உள்ள தேர்வு மையத்திலும் சிறைவாசிகள் எழுதினர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி முடிவுகளை வருகிற 8.5.2023 -ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிளஸ் 2 தேர்வினை 10,690 மாணவர்கள்,  11,041 மாணவிகள் என மொத்தம் 21,731  பேர் எழுதியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top