Close
நவம்பர் 21, 2024 11:44 மணி

புதுகை நகராட்சி பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம்: நகராட்சித்தலைவர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி ராஜகோபாலபுரம் பள்ளியில் காலை உணவு பரிமாறும் நகர் மன்றத்தலைவர் திலகவதிசெந்தில்

புதுக்கோட்டை நகராட்சி பள்ளிகளில் செயல்பட்டு வரும் காலை உணவு வழங்கும் திட்டத்தை நகராட்சித்தலைவர் திலகவதிசெந்தில் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, அண்ணா பிறந்த நாளான செப் 15 -2022 -ல்   மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி தினமும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைவர். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசு செலவு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை படிப்படியாக விரிவுபடுத்தி, முழுமையாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று (மார்ச்.1) புதுக்கோட்டை நகராட்சியில் 11 பள்ளிகளில் 1377 மாணவ,மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது:

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் 1377 மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு திட்ட தொடக்க விழா சாந்தநாதபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  நடைபெற்றது.

புதுக்கோட்டை
காலை உணவுத்திட்டத்தை ஆய்வு செய்த நகராட்சித்தலைவர்

ஜனவரி 13 -இல் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ,மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளிகளில் விரிவுபடுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட கோவில்பட்டி, சந்தைப்பேட்டை, போஸ்நகர், மாலையீடு, மச்சுவாடி, சாந்தநாதபுரம், பிள்ளை தண்ணீர் பந்தல், சமத்துவபுரம், தைலாநகர், அசோக்நகர், அன்னச்சத்திரம் ஆகிய 11 பள்ளிகளில் உள்ள 1137 மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் காலை சிற்றுண்டி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட 11 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 1 -ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை
நகராட்சிப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர் திலகவதி செந்தில்

இந்நிலையில், கோடை விடுமுறைக்குப்பின்னர்  பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை நகரில் இயங்கி வரும்  நகராட்சிப்பள்ளிகளில்  காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை  நகராட்சித் தலைவர் திலகவதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதில், புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் சாந்தநாதபுரம் நகராட்சி நடுநிலை ப்பள்ளிகளில் திங்கள்கிழமை காலை பள்ளி திறக்கும் நேரத்தில் நேரில் சென்று  ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர்(பொறுப்பு) கலியகுமார், நேர்முக உதவியாளர் குமாரவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள் ச. வளர்மதி, குமரகுருபரன், தெய்வானை, ராஜேந்திரன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

இதையடுத்து சாந்தநாதபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சித்தலைவர் ஆய்வு செய்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை அமிர்தகொடி  வரவேற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top