மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 1.90 செலவில் புதிய கட்டடங்களுக்கு டாக்டர் கலாநிதி வீராசாமி எம். பி. அடிக்கல் நாட்டி வைத்தார்.
சென்னை மணலியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு காமராஜர் துறைமுக நிதி உதவியுடன் ரூ. 1.90 செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டடங்களுக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திங்கள் கிழமை அடிக்கல் நாட்டினார்.
மணலி பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில் புதிய கட்டடங்கள் அமைத்து தருமாறு ஆசிரியர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி ரூ. 63 லட்சம், சென்னை மாநகராட்சி நமக்கு நாமே திட்ட நிதி உதவி ரூ. 1.27 கோடி உள்ளிட்டவை அடங்கிய ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் மற்றும் கழிவறை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மணலி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி புதிய கட்டடங்களை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் இப்பள்ளியில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் கட்டுமான பணியையும், காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலாநிதி வீராசாமி ஆய்வு நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் எம் சிவகுருநாதன், திமுக நிர்வாகிகள் வ.முத்துசாமி, கே தாமரை செல்வன், நாகலிங்கம், மாமன்ற உறுப்பினர் கே. காசிநாதன், மற்றும் காமராஜர் துறைமுகம், சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.