சென்னை எண்ணூரில் ரூ. 76 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை திறந்து வைத்தார்.
எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பு பகுதியில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஓட்டுக் கூரையால் அமைக்கப்பட்ட இப்பள்ளிக் கட்டடம் சிதிலடைந்ததையடுத்து புதிய கட்டடம் கட்டித் தருமாறு பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இத்திட்டத்தின்படி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) நிதியுதவி ரூ. 48 லட்சம், மாநகராட்சி பொது நிதி ரூ.28 லட்சம் என மொத்தம் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. புதிய பள்ளிக் கட்டடத்தை நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து கட்டடத்தை பார்வயிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர், எஸ்.சுதர்சனம், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் சமீரன், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் தமிழரசன், கே.பி.சொக்கலிங்கம், திமுக நிர்வாகிகள் ம.அருள்தாசன், மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.