புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலை வழிபாட்டு நிகழ்வில் மாணவர் களும் ஆசிரியர்களும் கல்விக் கடவுளை வணங்கி பாடல்கள் பாடுகின்றனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், பொரி பிரசாரங்கள் வழங்கப்படுகின்றன.
பள்ளியில் கொலு வைக்கும் நிகழ்வுக்கு வீடுகளிலிருந்து பெற்றோர்கள் ஏராளமான கடவுள் பொம்மைகளை கொடுத்து அனுப்புகின்றனர். பத்து நாள் நிகழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆசிரியர் குழு பொறுப்பெடுத்துக் கொண்டு நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.
பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பற்றி பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது: கல்விக் கடவுள் சரஸ்வதியை வணங்குவதற்கு, கொண்டாடு வதற்கு பள்ளிக்கூடங்களைத் தவிர வேறு எந்த இடம் பொருத்தமாய் இருக்கும்.
ஆகவேதான் தொடந்து இரண்டாம் ஆண்டாக பள்ளியில் கொலு நிகழ்வை நடத்துகின்றோம்.கொலுவிலுள்ள பொம்மை களை மாணவர்கள் மகிழ்ந்து நோக்குகிறார்கள். கல்விக் கடவுளின் வரலாறுகளை ஆர்வமாய் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.
மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் ஒழுக்கம், நேர்மை, தூய்மை, மனித நேயம் ஆகிய பெரிய பெரிய விஷயங்களை இந்த கொலுவிலுள்ள சின்னச் சின்ன பொம்மைகள் உணர்த்தி விடுகின்றன என்றார் அவர்.