புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரத்தக்கொடையாளர் களுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ரத்ததான உறுதி ஏற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான தின நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில், இரத்ததான உறுதிமொழியான, ‘இரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தன்னார்வ இரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.
ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என்ற உறுதி மொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்வில், இரத்ததான கொடையாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், புதுக்கோட்டை அருகே வேப்பங்குடியில் இயங்கி வரும் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக இரத்ததான முகாம் நடத்தியமைக்காக, விருதினை புஷ்கரம் வேளாண் கல்லூரியின் செயலாளர் மோ. ராஜாராம் மற்றும் மேலாளர் இரா. நெப்போலியன் ஆகியோர் பெற்றுக் கொண் டனர். கல்லூரியின் இயக்குனர் ரெ. துரை கௌரவ படுத்தப்பட்டார்.
இதில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு மாவட்ட திட்ட மேலாளர் மரு.க.இளையராஜா, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.எஸ்.சரவணன், மாவட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.